6
ஏனெனில், நம் தந்தையர் துரோகம் செய்து, நம் கடவுளாம் ஆண்டவரின் பார்வையில் தீயன செய்தனர்: அவரைப் புறக்கணித்து, ஆண்டவரின் திருஉறைவிடத்திலிருந்து தங்கள் முகங்களைத் திருப்பி, முதுகைக் கட்டினர்.
7
அவர்கள், திருத்திலத்தில், இஸ்ரயேலின் கடவுளுக்குத் தூபமிடாமலும் எரிபலி செலுத்தாமலும் விளக்குகளை அணைத்து விட்டு, மண்டபக் கதவுகளைப் பூட்டி வைத்தனர்.
8
அதனால், யூதாவின் மீதும், எருசலேமின்மீதும் ஆண்டவர் சினம் கொண்டார்: அவர் அவர்களை நடுக்கத்திற்கும் அச்சத்துக்கும், பழிப்பிற்கும் கையளித்தார். இதை நீங்கள் கண்ணாரக் கண்டீர்கள்!
9
இதன் பொருட்டே இதோ நம் தந்தையர் வாளால் வெட்டுண்டனர்: நம் புதல்வரும் புதல்வியரும் மனைவியரும் நாடு கடத்தப்பட்டனர்.
10
இப்பொழுது இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவருடன் ஓர் உடன்படிக்கை செய்ய என் மனம் முடிவு செய்துள்ளது: அப்பொழுதுதான் அவரது வெஞ்சினம் நம்மைவிட்டு நீங்கும்.
11
ஆதலால், எம் புதல்வர்களே, நீங்கள் வாளாவிருக்க வேண்டாம்: ஏனெனில், நீங்கள் ஆண்டவர் திருமுன் நின்று திருப்பணி புரியவும், வழிபாடு நிறைவேற்றவும், தூபமிடவும் அவர் உங்களைத் தேர்ந்து கொண்டுள்ளார் ‘ என்றார்.