1
யோத்தாம் அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். சாதோக்கின் மகள் எரூசா என்பவளே அவன் தாய்.
2
தன் தந்தை உசியாவைப்போல் அவன் ஆண்டவரின் பார்வையில் நேரியன செய்து வந்தான்: அவனைப்போலன்றி ஆண்டவரின் இல்லத்தில் நுழையவில்லை. மக்களோ தொடர்ந்து தீய வழியில் நடந்தனர்.
3
அவன் ஆண்டவரது இல்லத்தின் உயர் வாயிலைக் கட்டியதுடன், ஒபேலின் மதில்களைப் பெரிதாகக் கட்டினான்.
4
அவன் யூதாவின் மலைகளில் நகர்களையும், காடுகளில் கோட்டைகளையும் கொத்தளங்களையும் கட்டினான்.
5
அவன் அம்மோனியரின் மன்னனுடன் போர்புரிந்து வெற்றி பெற்றான். அந்த ஆண்டில் அம்மோனியர் அவனுக்கு நாலாயிரம் கிலோகிராம் வெள்ளியும், பத்தாயிரம் கலம் கோதுமையும், பத்தாயிரம் கலம் வாற்கோதுமையும் அளித்தனர். இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளிலும் அவ்வாறே அம்மோனியர் அவனுக்கு அளித்தனர்.
6
யோத்தாமின் வழிகள் அவன் கடவுளாம் ஆண்டவரின் திருமுன் நேரியனவாக இருந்தமையால், அவன் வலிமையுடையவன் ஆனான்.
7
யோத்தாமின் பிற செயல்களும், அவனுடைய எல்லாப் போர்களும், அவன் வழிமுறைகளும் இஸ்ரயேல், யூதா அரசர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன.
8
அவன் அரசனான போது அவனுக்கு வயது இருபத்தைந்து. பதினாறு ஆண்டுகள் எருசலேமில் அவன் ஆட்சி செய்தான்.
9
யோத்தாம் தன் மூதாதையருடன் துயில்கொண்டு, தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் அவனுக்குப் பின் அரசனானான்.