17
பின்னர், அமட்சியா ஆலோசனை செய்து, ஏகூவின் மகன் யோவகாசுக்குப் பிறந்த யோவாசு என்ற இஸ்ரயேலின் அரசனிடம்,‘வாரும், நாம் நேருக்கு நேர் பார்த்துக்கொள்வோம் ‘ என்று சவால் விட்டான்.
18
இஸ்ரயேலின் அரசன் யோவாசு யூதாவின் அரசன் அமட்சியாவுக்கு ஆளனுப்பி,‘லெபனோன் முட்செடி, லெபனோன் கேதுரு மரத்திடம் தூது அனுப்பி, 'நீ உன் மகளை என் மகனுக்கு மணமுடித்துக்கொடு என்று கேட்டதாம்: அப்பொழுது லெபனோன் காட்டு விலங்கு ஒன்று அவ்வழியே போகையில் அம் முட்செடியை மிதித்துப் போட்டதாம்!
19
ஏதோமை நீர் முறியடித்ததனால், உம் இதயம் தற்பெருமை கொண்டு எழுகிறது: இப்பொழுது நீர் உம் வீட்டிலேயே இரும்! நீரும் உம்மோடு யூதாவும் வீழ்ச்சியுறும்படி, தீமையை நீர் ஏன் தேடிக்கொள்ள வேண்டும்? ‘ என்று பதிலளித்தான்.
20
ஆனால் அமட்சியா அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ஏதோமின் தெய்வங்களை அவன் வழிபட்டு வந்ததனால், அவனை எதிரிகளின் கையில் ஒப்பவிக்கக் கடவுள் திட்டமிட்டிருந்தார்.
21
ஆகவே, இஸ்ரயேலின் அரசன் யோவாசு போருக்குக் புறப்பட்டு வர, அவனும் யூதா அரசன் அமட்சியாவும் யூதாவின் பெத்செமேசில் நேருக்கு நேர் மோதினர்.
22
யூதாவினர் இஸ்ரயேலரால் முறியடிக்கப்பட்டு, அவரவர் தம் கூடாரத்திற்கு ஓடினர்.
23
யூதாவின் அரசனும் யோவாசின் மகனுமான அமட்சியாவை யோவகாசின் மகனும் இஸ்ரயேலின் அரசனுமான யோவாசு பெத்செமேசில் சிறைப்பிடித்து, எருசலேமுக்கு இட்டுச் சென்றான். எப்ராயிம் வாயில் தொடங்கி மூலைவாயில் வரை நானூறு முழ நீளத்திற்கு எருசலேம் மதிலை யோவாசு இடித்துத் தள்ளினான்.
24
கடவுளின் இல்லத்தில் ஓபேது-ஏதோமின் பொறுப்பில் இருந்த அனைத்துப் பொன், வெள்ளி, அனைத்துக் கலன்கள், அரண்மனையின் கருவூலங்களில் இருந்தவை ஆகியவற்றைக் கொள்ளையடித்தான்: பிணைக் கைதிகளையும் சமாரியாவுக்கு இட்டுச் சென்றான்.