2நாளாகமம் 20:6-12 - WCV
6
‘எங்கள் மூதாதையின் கடவுளாகிய ஆண்டவரே! விண்ணகக் கடவுள் நீரே அன்றோ! நீரே நாடுகளின் அரசுகள் அனைத்தையும் ஆள்பவர்: நீரே வலிமையும் ஆற்றலும் வாய்ந்தவர்! உம்மை எதிர்த்து நிற்க யாராலும் முடியாது.
7
எங்கள் கடவுளே, உம் மக்கள் இஸ்ரயேலருக்காக இந்த நாட்டு மக்கள்அனைவரையும் வெளியேற்றி, இதனை உம் நண்பர் ஆபிரகாமின் வழிமரபினருக்கு என்றென்றுமாகக் கொடுத்தவர் நீரே அன்றோ!
8
ஆகவே, அவர்கள் இந்நாட்டில் குடியேறி உமது திருப்பெயர் விளங்குமாறு இத்திருத்தலத்தை எழுப்பினார்கள்.
9
வாள், தண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் ஆகிய எவ்விதத் தீங்கும் எங்களுக்கு நேர்ந்தால், உமது திருப்பெயர் விளங்கும் இக்கோவிலுக்கு நாங்கள் வந்து, உமது திருமுன் நின்று, எங்கள் வேதனைகளில் உம்மை நோக்கி மன்றாடுவோம், நீரும் அதனைக் கேட்டு எங்களை மீட்பீர்.
10
இதோ! அம்மோனியரும் மோவாபியரும், சேயீர் மலைநாட்டவரும் எங்களுக்கு எதிராக வருகிறார்கள்: எகிப்திலிருந்து இஸ்ரயேலர் வெளியேறிய காலத்தில் இவர்கள் நாட்டின் வழியே போக நீர் அவர்களை அனுமதிக்கவில்லை: எனவே, இஸ்ரயேலர் அவர்களை அழிக்காது விலகிச் சென்றனர்.
11
இதோ, அவர்கள் நன்றி கொன்றவர்களாய் நீர் எமக்கு உடைமையாகத் தந்த இந்நாட்டிலிருந்து எங்களைத் துரத்திவிட வருகிறார்களே!
12
எங்கள் கடவுளே, அவர்களுக்கு நீர் நீதி வழங்க மாட்டீரோ? எங்களுக்கு எதிராக வருகிற இப்பெரும் படையை எதிர்த்து நிற்க எங்களுக்கு வலிமை இல்லை. எங்கள் கண்கள் உம்மை நோக்கிக் கொண்டிருக்கின்றன. நாங்கள் செய்ய வேண்டியது வேறு எதுவெனத் தெரியவில்லை ‘ என்று மன்றாடினார்.