7
அதற்கு ஆகாபு,‘ஆண்டவரின் வாக்கைக் கேட்டறிவதற்கு இம்லாவின் மகன் மீக்காயா என்பவன் இருக்கிறான். ஆனால், நான் அவனை வெறுக்கிறேன். ஏனெனில் எனக்குச் சாதகமாய் அன்று, பாதகமாவே எப்பொழுதும் இறைவாக்கு உரைக்கிறான் ‘ என்றான். அதற்கு யோசபாத்து,‘அரசே நீர் அவ்விதமாய்ப் பேசவேண்டாம் ‘ என்றார்.
8
உடனே இஸ்ரயேலின் அரசன் ஓர் அலுவலரிடம்,‘இம்லாவின் மகன் மீக்காயாவை உடனே அழைத்து வா ‘ என்றான்.
9
பிறகு இஸ்ரயேலின் அரசனும், யூதாவின் அரசர் யோசபாத்தும் அரச உடைகளை அணிந்தவர்களாய்ச் சமாரியா நுழைவாயில் மண்டபத்தில் தம் அரியணையில் அமர்ந்தனர். அவர்கள் முன் பொய்வாக்கினர் அனைவரும் வாக்கு உரைத்துக் கொண்டு இருந்தனர்.
10
அப்பொழுது கெனானாவின் மகன் செதேக்கியா இரும்புக் கொம்புகளைச் செய்து, ‘இவற்றால் நீர் சிரியரைக் குத்தி அழித்து விடு ‘ என்று ஆண்டவர் கூறுகிறார் ‘ என்றான்.
11
பொய்வாக்கினர் அனைவரும் அவ்வாறே வாக்கு உரைத்து,‘நீர் இராமோத்து-கிலயாதைத் தாக்குவீர்: வெற்றி பெறுவீர். ஆண்டவர் அவர்களை அரசர் கையில் ஒப்புவிப்பார் ‘ என்றனர்.
12
மீக்காயாவை அழைக்கப்போன தூதன் அவரை நோக்கி,‘இறைவாக்கினர் அனைவரும் ஒரே வாய்ப்பட அரசருக்கு உகந்ததாகவே வாக்குரைத்துக் கொண்டிருக்கின்றனர். உம் வாக்கும் அவர்களது வாக்கைப்போல் இருக்கட்டும். அரசருக்கு உகந்ததாகவே பேசும் ‘ என்றான்.
13
அதற்கு மீக்காயா,‘ஆண்டவர் மேல் ஆணை! என் கடவுள் எனக்குச் சொல்வதையே நான் உரைப்பேன் ‘ என்றார்.
14
அவர் அரசனிடம் வந்தபோது அவன் அவரிடம்,‘மீக்காயா! நாங்கள் இராமோத்து-கிலயாதின் மீது போர் தொடுக்கலாமா? வேண்டாமா? ‘ என்று கேட்டன். அதற்கு அவர்,‘போங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்: எதிரிகள் உங்கள் கையில் ஒப்படைக்கப்படுவார்கள் ‘ என்றார்.
15
அரசன் அவரிடம்,‘ஆண்டவர் திருப்பெயரால் உண்மையைத் தவிர வேற எதையும் என்னிடம் சொல்லலாகாது என்று உன்னை எத்தனை முறை ஆணையிடவைப்பது? ‘ என்றான்.
16
அப்பொழுது மீக்காயா,‘இஸ்ரயேலர் யாவரும் ஆயனில்லா ஆடுகளைப்போல் மலைகளில் சிதறுண்டு கிடக்கக் கண்டேன். அப்பொழுது ஆண்டவர், 'இவர்களுக்குத் தலைவன் இல்லை: அவரவர்தம் வீட்டிற்கு அமைதியாகத் திரும்பிக் போகட்டும்’' என்றார் ‘ என்று கூறினார்.
17
அதைக் கேட்ட இஸ்ரயேலின் அரசன், யோசபாத்தை நோக்கி,‘இவன் எனக்குச் சாதகமாக அன்று, பாதகமாகவே இறைவாக்கு உரைப்பான் என்று நான் முன்பே உமக்குச் சொல்லவில்லையா? ‘ என்றான்.
18
அப்பொழுது மீக்காயா,‘ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: ஆண்டவர் தம் அரியணைமேல் வீற்றிருப்பததையும் விண்ணகப்படையெல்லாம் அவர்தம் வலப்புறமும் இடப்புறமும் நிற்பதையும் கண்டேன்.
19
அந்நேரத்தில் ஆண்டவர், 'இஸ்ரயேலின் அரசனான ஆகாபு இராமோத்து-கிலயாதிற்குச் சென்று அங்கே வீழ்ச்சியடையும்படி அவனை வஞ்சிக்கப்போகிறவன் யார்?' என்று கேட்க, அதற்கு ஒருவன் ஒன்றைச் சொல்ல, மற்றொருவன் வேறொன்றைச் சொன்னான்.
20
அப்பொழுது ஒர் ஆவி ஆண்டவர் திருமுன் வந்து, 'நானே போய் அவனை வஞ்சிப்பேன்' என்றது. 'எவ்வாறு?' என்று ஆண்டவர் அதைக் கேட்டார்.
21
அந்த ஆவி, 'நான் போய் அவனுடைய இறைவாக்கினர் அனைவரின் வாயிலும் பொய்யுரைக்கும் ஆவியாக இருப்பேன்' என்றது. அதற்கு ஆண்டவர் 'நீ அவனை ஏமாற்றி வெற்றி காண்பாய். போய் அவ்வாறே செய்' என்றார்.
22
எனவே, இதோ இறைவாக்கினர் இவர்களின் வாயில் ஆண்டவர் பொய்யுரைக்கும் ஆவியை இட்டுள்ளார். உண்மையில் ஆண்டவர் உனக்குத் தீங்கானவற்றையே கூறியுள்ளார் ‘ என்றார்.
23
அப்பொழுது கெனானாவின் மகன் செதேக்கியா மீக்காயாவின் அருகில் வந்து, அவரது கன்னத்தில் அறைந்து,‘ஆண்டவரின் ஆவி என்னைவிட்டு எவ்வழியாகச் சென்ற உன்னிடம் பேசிற்று என்று சொல் ‘ என்றான்.
24
அதற்கு மீக்காயா,‘நீ உள்ளறைக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் நாளில் தெரிந்து கொள்வாய் ‘ என்றார்.
25
அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் இவ்வாறு கட்டளையிட்டான்:‘ ‘மீக்காயாவைப் பிடித்து, அவனை நகரின் ஆளுநன் ஆமோனிடமும், அரசன் மகன் யோவாசிடமும் இழுத்துச் செல்லுங்கள்.
26
அவர்களிடம் 'நலமாய் நான் திரும்பும்வரை இவனைச் சிறையில் அடைத்து வையுங்கள்: இவனுக்குச் சிறிதளவே அப்பமும் தண்ணீரும் கொடுத்து வாருங்கள்' என்று கூறுங்கள் ‘
27
அதற்கு மீக்காயா,‘நலமாய் நீ திரும்பி வந்தால், ஆண்டவர் என் வாயிலாகப் பேசவில்லை என்பது பொருள். அனைத்து மக்களே, இதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் ‘ என்றார்.