2நாளாகமம் 13:8-18 - WCV
8
இப்பொழுது, தாவீதின் வழிமரபிற்கு ஆண்டவர் அளித்த அரசை எதிர்த்து நிற்க நீங்கள் எண்ணுகிறீர்கள்: நீங்கள் பெருந்திரளாக இருக்கிறீர்கள்: அத்துடன் எரொபவாம் உங்களுக்குத் தெய்வங்களாகச் செய்த பொற்கன்றுகுட்டிகளையும் நீங்கள் வைத்திருக்கிறீர்கள்.
9
மேலும், நீங்கள் ஆரோனின் வழிவந்த ஆண்டவரின் குருக்களையும் லேவியரையும் புறறக்கணித்துவிட்டு, மற்ற நாட்டு மக்களைப் போல் உங்களுக்குக் குருக்களை ஏற்படுத்திக் கொண்டீர்கள்: ஓர் இளம் காளையோடும், ஏழு ஆட்டுக்கிடாய்களோடும் திருநிலை பெற வரும் எவனும் தெய்வமல்லாதவற்றுக்குக் குரு ஆகிவிடுகிறான்!
10
ஆனால் எங்களைப் பொறுத்த வரை, ஆண்டவரே எங்கள் கடவுள்! அவரை நாங்கள் பறக்கணிக்கவில்லை. ஆரோன் வழிவந்த குருக்களே ஆண்டவருக்குப் பணிபுரிவீர்! லேவியரோ அப்பணியில் துணைநிற்பர்.
11
அவர்கள் நாள்தோறும் காலையிலும் மாலையிலும், ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தி, நறுமணத் தூபமிட்டு, தூய்மையான மேசைமேல் திருமுன்னிலை அப்பங்களை வைப்பர்: பொன் விளக்குத் தண்டின் அகல்கள் மாலைதோறும் ஏற்றப்படும்: இவ்வாறு நாங்கள் எங்கள் கடவுளாம் ஆண்டவரின் ஒழுங்கு முறைகளை நிறைவேற்றுகிறோம்: நீங்களோ அவர்களை புறக்கணித்துவிட்டீர்கள்.
12
இதோ! கடவுளே எங்கள் தலைவராக எங்களோடு இருக்கிறார்: உங்களுக்கு எதிராகப் போரிட அவருடைய குருக்களே எக்காளங்களை ஊதிப் பேரொலி எழுப்புவார்கள்! ஆதலால், இஸ்ரயேல் மக்களே!உங்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவருக்கு எதிராகப் போரிடதீர்கள்: ஏனெனில். நீங்கள் வெற்றியடைய மாட்டீர்கள் ‘ என்று கூறினான்.
13
ஆனால் எரொபவாம் பதுங்கிச்செல்லும் ஒரு படையை அனுப்பி, யூதாவைப் பின்புறம் சுற்றி வளைக்கச் செய்தான்: அவனோடிருந்த படையோ யூதாவின் முன்னே நின்றது.
14
யூதாவின் வீரர்கள் திரும்பிப் பார்த்தபோது, அவர்களை முன்னும் பின்னும் எதிர்க்கும் படைகளைக் கண்டனர். உடனே அவர்கள் ஆண்டவரை நோக்கி, அபயக் குரலிட, குருக்கள் எக்காளங்களை ஊதினர்.
15
யூதாவின் வீரர்கள் போர் முழக்கமிட்டனர்: அப்படி முழக்கமிட்டபோது, கடவுள் அபியா, யூதா முன்பாக எரொபவாமையும் இஸ்ரயேலர் எல்லாரையும் முறியடித்தார்.
16
இஸ்ரயேலர் யூதாவுக்குப் புறமுதுகு காட்டி ஓடினர். கடவுள் இஸ்ரயேல் மக்களை யூதாவிடம் கையளித்தார்.
17
அப்பொழுது, அபியாவும் அவன் மக்களும் அவர்களைப் பெருமளவில் வெட்டி வீழ்த்தி, இஸ்ரயேலில் ஆற்றல்மிகு ஐந்து இலட்சம் வீரர்களைக் கொன்றனர்.
18
அந்நேரத்தில், இஸ்ரயேலின் புதல்வர் சிறுமையுற, தங்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரை நம்பி வாழ்ந்த யூதாவின் புதல்வர் வலிமையுற்றனர்.