10
ஆதலால் சபையார் அனைவரின் பார்வையில் தாவீது ஆண்டவரை வாழ்த்தினார். அவர் கூறியது: ;எங்கள் மூதாதை இஸ்ரயேலின் ஆண்டவரே, நீர் என்றென்றும் வாழ்த்தப் பெறுவீராக!
11
ஆண்டவரே, பெருமையும் வலிமையும் மாட்சியும் வெற்றியும் மேன்மையும் உமக்கே உரியன. ஏனெனில் விண்ணுலகிலும் மண்ணுலகிலும் இருக்கும் அனைத்தும் உம்முடையவை. ஆண்டவரே, ஆட்சியும் உம்முடையதே. நீர் யாவருக்கும் தலைவராய் உயர்த்தப் பெற்றுள்ளீர்.
12
செல்வமும் மாட்சியும் உம்மிடமிருந்தே வருகின்றன. நீரே அனைத்தையும் ஆள்பவர். ஆற்றலும் வலிமையும் உம்கையில் உள்ளன. எவரையும் பெருமைப்படுத்துவதும் வலியவராக்குவதும் உம் கையில் உள்ளன.
13
இப்பொழுது எங்கள் கடவுளே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்தி உம் மாட்சிமிகு பெயரைப் போற்றுகிறோம்.
14
இவ்வாறு இந்தத் தன்விருப்பக் காணிக்கையை அளிப்பதற்கான ஆற்றலை நாங்கள் பெறுவதற்கு, நான் யார்? என் மக்கள் யார்? யாவும் உம்மிடத்திலிருந்து வந்தவை. உம் கையினின்று நாங்கள் பெற்றுக்கொண்டவற்றையே நாங்கள் உமக்குக் கொடுத்துள்ளோம்.
15
உம் திருமுன் நாங்கள் எம் மூதாதையரைப் போலவே அன்னியரும் நாடோடிகளுமாய் இருக்கிறோம். மண்ணுலகில் எங்கள் வாழ்நாள்கள் நிழல் போன்றவை: நிலையற்றவை.
16
எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உம் புனித பெயருக்கென்று உமக்குக் கோவில் கட்டுவதற்கு நாங்கள் சேர்த்து வைத்துள்ள இந்தப் பெருங்குவியல் முழுமையும் உம் கையிலிருந்து வந்தது: உமக்கே உரியது.
17
என் கடவுளே, நீர் இதயத்தை ஆய்ந்தறிபவர் என்றும், நேரியனவற்றை நாடுபவர் என்றும் நான் அறிவேன். நான் நேரிய மனத்தினனாய்த் தாராளமனத்துடன் இவை அனைத்தையும் கொடுத்துள்ளேன். இங்கே குழுமியிருக்கும் உம் மக்களும் இப்பொழுது தாராள மனத்துடன் கொடுத்ததைக் கண்டு மகிழ்கிறேன்.
18
ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேல் என்னும் எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, உம் மக்களின் இத்தகைய இதய நோக்கங்களையும் எண்ணங்களையும் என்றென்றும் காத்து, அவர்களின் நெஞ்சங்களை உம்பால் திருப்பியருளும்.
19
என் மகன் சாலமோன் உம் விதிமுறைகளையும் ஒழுங்குமுறைகளையும், நியமங்களையும் கடைப்பிடித்து ஒழுகுவதற்கும், இவை அனைத்தையும் செய்து நான் வைத்துள்ள இந்த இல்லத்தைக் கட்டியெழுப்பவும் நிறைவான உள்ளத்தையும் அவனுக்கு அளித்தருளும். ;
20
பின்பு தாவீது சபையார் அனைவரையும் நோக்கி,;உங்கள் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்துங்கள் ; என்றார். உடனே சபையார் அனைவரும் தங்கள் மூதாதையரின் கடவுளான ஆண்டவரை வாழ்த்திப் பணிந்து தொழுதனர்: அரசனையும் வணங்கினர்.