1நாளாகமம் 12:23-40 - WCV
23
ஆண்டவரின் வாக்குறுதிப்படி சவுலின் அரசைத் தாவீதிடம் ஒப்படைக்குமாறு, எபிரோனில் இருந்த தாவீதிடம் வந்த படைக்கலன் தாங்கிய தலைவர்களின் எண்ணிக்கை இதுவே:
24
யூதா புதல்வரில், கேடயமும் ஈட்டியும் தாங்கிப் போர்க்கோலம் பூண்ட ஆறாயிரத்து எண்ணூறு பேர்:
25
சிமியோன் புதல்வரில் போரிடத் தயாரான ஆற்றல் மிகு வீரர் ஏழாயிரத்து நூறு பேர்.
26
லேவி புதல்வர்களில் நாலாயிரத்து அறுநூறு பேர்.
27
ஆரோன் வழிவந்த தலைவரான யோயாதா மற்றும் அவரோடிருந்த மூவாயிரத்து எழுநூறு பேர்:
28
ஆற்றல்மிகு இளைஞரான சாதோக்கு மற்றும் அவர் மூதாதை வீட்டைச் சார்ந்த அதிகாரிகள் இருபத்திரண்டு பேர்.
29
பென்யமின் புதல்வரில், சவுலின் உறவினர் மூவாயிரம் பேர்: அவர்களில் பெரும்பான்மையோர் அதுவரை சவுலின் குடும்பத்திற்குச் சார்பாய் இருந்தவர்கள்:
30
எப்ராயிம் புதல்வரில், ஆற்றல் மிகு வீரர் இருபதினாயிரத்து எண்ணூறு பேர், அவர்கள் தங்கள் மூதாதை வீட்டில் புகழ்பெற்றவர்கள்.
31
மனாசேயின் பாதி குலத்தில், பதினெட்டாயிரம் பேர்: அவர்கள் பெயர்ப் பட்டியலின்படி தாவீதை அரசராக்குவதற்கு வந்தனர்.
32
இசக்கார் புதல்வரில், இஸ்ரயேலர் செய்யவேண்டியது இன்னதென்று குறித்த காலத்தில் அறிவுரை வழங்கி வந்த நுண்ணறிவுடைய இரு நூறு தலைவர்கள் மற்றும் இவர்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டிருந்த இவர்களின் எல்லா உறவினர்:
33
செபுலோன் புதல்வரில், அனைத்துப் போர்க்கலன்களுடன் ஒரே மனத்தோராய்ப் போருக்குத் தயார் நிலையில் அணிவகுத்து நின்ற வீரர் ஐம்பதாயிரம் பேர்.
34
நப்தலியைச் சார்ந்த ஆயிரம் அதிகாரிகளும் மற்றும் கேடயமும் ஈட்டியும் தாங்கிய முப்பத்தேழாயிரம் பேர்.
35
தாணைச் சார்ந்த போருக்கு அணிவகுத்து நின்ற இருபத்து எட்டாயிரத்து அறுநூறு பேர்.
36
ஆசேரைச் சார்ந்த போருக்குத் தயார் நிலையில் அணிவகுத்து நின்ற நாற்பதாயிரம் பேர்.
37
யோர்தானுக்கு அப்பால் ரூபன், காத்து, மனாசேயின் பாதிக்குலம் இவற்றைச் சார்ந்த அனைத்துப் போர்க்கோலம் பூண்ட ஓர் இலட்சத்து இருபதினாயிரம் பேர்.
38
இந்தப் போர்வீரர் அனைவரும் போர்க்கள அணி வகுப்பில், தாவீதை இஸ்ரயேல் அனைத்துக்கும் அரசராக ஏற்படுத்துமாறு உறுதிபூண்டவராய் எபிரோனுக்கு வந்தனர். மேலும் எஞ்சியிருந்த இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஒரே மனதாய் தாவீதையே அரசராக்க விரும்பினர்.
39
அவர்கள் அங்கே தாவீதோடு உண்டு குடித்து மூன்று நாள் தங்கினார்கள். அவர்கள் உறவினர் அவர்களுக்காக எல்லாவற்றையும் தயார் செய்திருந்தனர்.
40
மேலும் இசக்கார், செபுலோன், நப்தலி நிலப்பகுதிகளில் அவர்களுக்கு அருகே இருந்தவர்கள், கழுதைகள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள், மாடுகள் ஆகியவற்றின் மீது ஏராளமான அப்பங்கள், உணவுக்கான மாவு, அத்திப்பழ அடைகள், திராட்சைப் பழ அடைகள், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றையும் மேலும் ஆடு மாடுகளையும் கொண்டு வந்தார்கள். இஸ்ரயேல் மகிழ்ச்சியில் திளைத்தது.