24
பின்னர் சிரியா மன்னன் பெனதாது தன் முழுப் படையையும் திரட்டிக் கொண்டு சமாரியாவுக்குச் சென்று அதை முற்றுகையிட்டான்.
25
எனவே சமாரியாவில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. ஒரு கழுதைத் தலை, எண்பது வெள்ளிக் காசுக்கும், புறாவின் எச்சம் கால்படி ஐந்து வெள்ளிக் காசுக்கும் விற்கும் அளவுக்கு முற்றுகை கடுமையாய் இருந்தது.
26
இஸ்ரயேலின் அரசன் நகர மதில்மேல் நடந்து செல்கையில் ஒரு பெண், ““அரசே, என் தலைவரே! என்னைக் காப்பாற்றும்!” என்று கூக்குரலிட்டாள்.
27
அதற்கு அவன், “ஆண்டவரே, உன்னைக் காப்பாற்றவில்லையெனில், நான் எப்படி உன்னைக் காப்பாற்றுவது? களஞ்சியத்திலிருந்தா? ஆலையிலிருந்தா?” என்றான்.
28
பின்னும் அரசன் அவளிடம், “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான். அதற்கு அவள், “இதோ! ஒரு நாள் இந்தப் பெண் என்னை நோக்கி, 'இன்று நாம் உண்பதற்கு உன் மகனைக் கொடு: நாளை என் மகனைத் தின்போம்' என்றாள்,
29
அவ்வாறே நாங்கள் என் மகனைச் சமைத்துத் தின்றோம். மறுநாள் நான் அவளிடம், 'நாம் உண்ணும்படி என் மகனைக் கொடு!' என்றேன். ஆனால் அவளோ தன் மகனை ஒளித்து வைத்துவிட்டாள்” என்று சொன்னாள்.
30
அரசன் இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன், தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டான். அவன், நகர மதில் வழியாக நடந்து செல்கையில், தன் உடலின்மேல் கோணியாடை அணிந்திருந்ததை மக்கள் கண்டனர்.
31
அரசன், “இன்றைக்குள் நான் சாபாற்றின் மகன் எலிசாவின் தலையை வெட்டாது விட்டால் கடவுள் என்னை இப்படியும் இதற்கு மேலும் தண்டிப்பாராக!” என்றான்.
32
அப்பொழுது எலிசா தம் வீட்டில் பெரியோர்களுடன் அமர்ந்திருந்தார். அரசன் தனக்குமுன் ஒரு மனிதனை அவரிடம் அனுப்பியிருந்தான். அத்தூதன் வருவதற்குள் எலிசா தம்மோடு இருந்த பெரியோர்களை நோக்கி,”இந்தக் கொலைகார மகன் என் தலையை வெட்டும்படி, இதோ ஒருவனை அனுப்பியிருப்பது தெரியவில்லையா? அத்தூதன் வரும்பொழுது அவன் உள்ளே வராதவாறு கதவை அடைத்து விடுங்கள். அவனைப் பின்தொடர்ந்து வரும் அவன் தலைவனின் காலடி ஓசையும் இதோ கேட்கிறதல்லவா?” என்றார்.
33
இவ்வாறு அவர் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில், அரசன் அவரிடம் வந்து சேர்ந்தான். அப்பொழுது அவன், “இந்தத் தீமை ஆண்டவரிடமிருந்தே வருகிறது! அப்படியிருக்க ஆண்டவருக்காக நான் இன்னும் ஏன் காத்திருக்க வேண்டும்?” என்றான்.