1
செதேக்கியாவினது ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டு பத்தாம் மாதம் பத்தாம் நாளில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் தன் எல்லாப் படைகளோடு எருசலேமுக்கு எதிராக வந்து, பாளையம் இறங்கி அதைச் சுற்றிலும் முற்றுகைத் தளம் எழுப்பினான்.
2
இவ்வாறு அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற பதினோராம் ஆண்டுவரை, நகர் முற்றுகைக்கு உள்ளாகியிருந்தது.
3
அவ்வாண்டு நான்காம் மாதம் ஒன்பதாம் நாள் நகரில் பஞ்சம் கடுமை ஆயிற்று. நாட்டு மக்களுக்கு உணவே கிடைக்கவில்லை.
4
அப்பொழுது, நகர் மதிலில் ஒரு திறப்பு உண்டாக்கப்பட்டது. போர்வீரர் அனைவரும் அரசர் பூங்காவின் இரு மதில்களுக்கு இடையே அமைந்த வாயில் வழியாக அராபாவை நோக்கி இரவில் ஓடினர். கல்தேயரோ நகரைச் சுற்றி முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர்.