2இராஜாக்கள் 24:1-9 - WCV
1
அவனது ஆட்சிக் காலத்தில் பாபிலோன் மன்னன் நெபுகத்னேசர் யூதாவின்மேல் படையெடுத்து வந்தான். எனவே யோயாக்கிம் மூன்று ஆண்டுகள் அவனுக்கு அடி பணிந்திருந்தான்: பின்பு மனத்தை மாற்றிக்கொண்டு அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான்.
2
ஆண்டவர் கல்தேயா, சிரியா, மோவாபு, அம்மோன் ஆகிய மகக்ளினங்களைச் சார்ந்தக் கொள்ளைக் கூட்டத்தாரை அவன்மீது ஏவிவிட்டார். அவர்தம் அடியாரான இறைவாக்கினர்மூலம் உரைத்திருந்த வாக்கின்படி யூதாவுக்கு எதிராக அதனை அழிப்பதற்காகவே அவர்களை அங்கே அனுப்பினார்.
3
உண்மையாகவே ஆண்டவரின் கட்டளைப்படி மனாசேயின் பாவங்களை முன்னிட்டும், அவன் செய்த எல்லாக் காரியங்களை முன்னிட்டும் அவர் அவர்களைத் தம் திருமுன்னின்று தள்ளவிடுமாறு, இவையெல்லாம் யூதாவுக்கு நிகழ்ந்தன.
4
மேலும் அவன் குற்றமற்றவர்களின் குருதியைச் சிந்தியதாலும், எருசலேமை மாசற்றவர்களின் குருதியால் நிரப்பியதாலும், ஆண்டவர் அவனை மன்னிக்க மறுத்துவிட்டார்.
5
யோயாக்கிமின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும், 'யூதா அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
6
யோயாக்கிம் தன் மூதாதையரோடு துயில் கொண்டான். அவனுக்குப் பின் அவன் மகன் யோயாக்கின் அரசனானான்.
7
எகிப்திய மன்னன் மீண்டும் தன் நாட்டை விட்டுப் போருக்கென வெளிவரவில்லை. ஏனெனில், எகிப்திய நதிமுதல் யூப்பரத்தீசு ஆறுவரை எகிப்திய மன்னன் கைவசம் இருந்த அனைத்தையும் பாபிலோனிய மன்னன் கைப்பற்றிக்கொண்டான்.
8
யோயாக்கின் அரசனான போது அவனுக்கு வயது பதினெட்டு. எருசலேமில் மூன்று மாதமே அவன் அரசாண்டான். எருசலேமைச் சார்ந்த எல்நாத்தானின் மகள் நெகுஸ்தா என்பவளே அவனுடைய தாய்.
9
யோயாக்கின் தன் தந்தை செய்த அனைத்தின்படியே ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.