4
அப்பொழுது அரசர் பாகாலுக்காகவும் அசேராவுக்காகவும் வானத்தின் படைத்திரள் அனைத்துக்காகவும் பயன்படுத்திய எல்லாக் கலன்களையும், தூயகத்தினின்று வெளியே எறிந்துவிடும்படி தலைமைக் குரு இல்க்கியாவுக்கும் துணைக் குருக்களுக்கும், வாயிற்காப்போருக்கும் கட்டளையிட்டார். அவர் அவற்றை எருசலேமுக்கு வெளியே கிதரோன் வெளிகளில் சுட்டெரித்து, சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டு சென்றார்.
5
அத்தோடு, யூதாவின் நகர்களிலும் எருசலேமைச் சுற்றிலும் எழுப்பப்பட்டிருந்த தொழுகை மேடுகளில் தூபம் காட்டுமாறு யூதா அரசர்களால் நியமிக்கப்பட்டிருந்த அர்ச்சகர்களை நீக்கினார். மேலும் பாகால், கதிரவன், நிலா, விண்மீன்கள், வானத்துப் படைத்திரள் அனைத்திற்கும் தூபம் காட்டியவர்களையும் நீக்கினார்.
6
ஆண்டவரின் இல்லத்திலிருந்து அசேராவை அகற்றி எருசலேமுக்கு வெளியே உள்ள கிதரோன் நீரோடைக்குக் கொண்டு சென்றார். அங்கே அதைச் சுட்டெரித்துத் தூளாக்கி அத்தூளைப் பொது மக்களின் கல்லறைகளின்மேல் தூவுமாறு பணித்தார்.
7
மேலும் ஆண்டவரின் இல்லத்திலிருந்த விலைஆடவரின் விடுதிகளையும், அசேராவுக்குத் தேவையான துணிகளை நெய்த பெண்களின் விடுதிகளையும் இடித்துத் தள்ளினார்.
8
அவர் யூதா நகர்களில் இருந்த எல்லாக் குருக்களையும் எருசலேமுக்கு அழைத்துக் கொண்டார். மேலும் அவர் கேபா முதல் பெயேர்செபாவரை அர்ச்சகர்கள் தூபம் காட்டிவந்த எல்லாத் தொழுகை மேடுகளையும் மாசுபடுத்தினார். நகர வாயிலின் இடப்புறம், நகரின் ஆளுநனான யோசுவா நுழைவாயிலின் முகப்பில் எழுப்பியிருந்த தொழுகை மேடுகளையும் இடித்துத் தள்ளினார்.
9
ஆயினும், தொழுகை மேடுகளின் அர்ச்சகர்கள் எருசலேமில் இருந்த ஆண்டவரது பலிபீடத்தை நெருங்காமல் தங்கள் சகோதரர்களோடு புளியாத அப்பங்களை உண்டு வந்தனர்.
10
மேலும் மோலெக்கு சிலைக்கு எவனும் தன் மகனையோ மகளையோ பலியாக்காதவாறு, பென்இன்னோம் பள்ளத்தாக்கிலிருக்கும் தொப்பேத்தையும் மாசுபடுத்தினார்.
11
அவர், ஆண்டவரின் இல்லத்தின் வாயிலருகில் இருந்த நாத்தான்மெலேக்கு என்ற மேற்பார்வையாளன் அறையை அடுத்து, யூதா அரசர்களால் கதிவனுக்கென்று எழுப்பப்பட்டிருந்த குதிரைச் சிலைகளையும் அகற்றினார். கதிரவனின் தேர்களையோ நெருப்பில் சுட்டெரித்தார்.
12
மேலும் யூதா அரசர்களால் ஆகாசின் மாடியறை மேல்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த பலிபீடங்களையும், ஆண்டவரின் இல்லத்தின் இரண்டு முற்றங்களிலும் மனாசேயால் கட்டப்பட்டிருந்த பலிபீடங்களையும், அரசர் இடித்துத் தூளாக்கி அந்த இடிப்பாட்டைப் கிதரோன் நீரோடையில் கொட்டினார்.
13
எருசலேமுக்குக் கிழக்கே, அழிவின் மலைக்குத் தெற்கே இருந்த தொழுகை மேடுகளை அவர் மாசுபடுத்தினார். இவை, சீதோனியரின் அருவருப்பான அஸ்தரோத்துக்கும், மோவாபியரின் அருவருப்பான கெமோசுக்கும், அம்மோனியரின் இழிபொருளான மில்க்கோமுக்கும் இஸ்ரயேலின் அரசர் சாலமோனால் கட்டப்பட்டவை.
14
மேலும் அவர் சிலைத்தூண்களையும், அசேராக் கம்பங்களையும் வெட்டி வீழ்த்தி, அவ்விடங்களை மனித எலும்புகளால் நிரப்பினார்.
15
இஸ்ரயேலைப் பாவத்துக்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாம் பெத்தேலில் எழுப்பியிருந்த தொழுகை மேட்டையும் அதன் பலிபீடத்தையும், அவர் தகர்த்துத் தீக்கிரையாக்கினார்: அசேராவைத் தூள்தூளாக்கி நெருப்பிலிட்டார்.
16
யோசியா திரும்பிப்பார்த்தபோது, அங்கு மலையின்மேல் கல்லறைகள் இருக்கக் கண்டார். அவர் ஆளனுப்பி அக்கல்லறைகளிலுள்ள எலும்புகளை எடுத்துவந்து, கடவுளின் அடியவர் உரைத்த ஆண்டவரின் வாக்கிற்கிணங்க, அவற்றைப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து மாசுபடுத்தினார்.
17
பின்பு அவர், “அதோ! அங்கு தெரியும் நினைவுச் சின்னம் யாருடையது?” என்று கேட்டார். அந்நகர மக்கள், “அது யூதா நாட்டைச் சார்ந்த கடவுளின் அடியவர் ஒருவரின் கல்லறை. நீர் பெத்தேலின் பலிபீடத்திற்கு இப்படியெல்லாம் செய்வீர் என்று உரைத்தவர் அவர் தான்” என்றனர்.
18
அதற்கு அவர், “அப்படியே இருக்கட்டும். அவருடைய எலும்புகளை ஒருவனும் தொடவேண்டாம்” என்றார். அப்படியே அவருடைய எலும்புகளையும், சமாரியவைச் சார்ந்த இறைவாக்கினர்களின் எலும்புகளையும் அங்கேயே விட்டு வைத்தனர்.
19
ஆண்டவருக்குச் சினமுண்டாகுமாறு, இஸ்ரயேலின் அரசர்கள் சமாரிய நகர்களில் எழுப்பியிருந்த தொழுகைமேட்டுக் கோவில்களை எல்லாம் யோசியா அகற்றி, பெத்தேலில் செய்தவாறே அவற்றிற்கும் செய்தார்.
20
அவர் அங்கிருந்த தொழுகைமேடுகளின் அர்ச்சகர் அனைவரையும் பலிபீடங்களின்மேல் கொன்றார். அப்பலிபீடங்களின்மேல் மனித எலும்புகளைச் சுட்டெரித்தப்பின், அவர் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்.