13
நீங்கள் போய் என்னைக் குறித்தும், மக்களைக் குறித்தும், யூதா முழுவதைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று ஆண்டவரின் திருவுளத்தைத் தெரிந்து வாருங்கள். ஏனெனில் இந்நூலில் நமக்காக எழுதப்பட்டுள்ளவற்றிற்கு நம் மூதாதையர்கள் செவிகொடுக்கவும் இல்லை. அவற்றின்படி நடக்கவும் இல்லை. எனவே ஆண்டவரின் சினம் நமக்கெதிராகக் கொழுந்து விட்டு எரிகிறது” என்றார்.
14
குரு இல்க்கியாவும் அகிக்காமும் அக்போரும், சாப்பானும், அசாயாவும் குல்தா என்ற இறைவாக்கினளிடம் சென்று அவரைக் கண்டு பேசினர். இவர் எருசலேமில் இரண்டாம் தொகுதியைச் சாந்தவர்: அர்கசின் புதல்வனான திக்வாயின் மகனும் ஆடையக மேற்பார்வையாளனுமான சல்லூம் என்பவனின் மனைவி.
15
அவர் அவர்களை நோக்கி, “இஸ்ரயேலின் கடவுளாசிய ஆண்டவர் கூறுவது இதுவே: என்னிடம் உங்களை அனுப்பியவரிடம் நீங்கள் சொல்ல வேண்டியது:
16
ஆண்டவர் கூறுவது இதுவே: யூதாவின் அரசர் படித்த அந்த நூலின் வார்த்தைகளின்படி, நான் இந்த இடத்திற்கும் அதில் வாழ்வோர்க்கும் தீங்கு வரச் செய்வேன்.
17
ஏனெனில், அவர்கள் என்னைப் புறக்கணித்துவிட்டு, வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டினர். அவர்கள் தங்கள் கைவினையான சிலைகள் அனைத்தாலும் எனக்குச் சினமூட்டினர். எனவே இவ்விடத்தின்மேல் கொண்ட என் சினம் கனன்று எரியும்: அதைத் தணிக்க இயலாது.