2இராஜாக்கள் 20:1-11 - WCV
1
அந்நாள்களில் எசேக்கியா நோயுற்றுச் சாகும்தருவாயில் இருந்தார். ஆமோட்சின் மகன் இறைவாக்கினர் எசாயா அவரிடம் வந்து, “ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீர் உமது வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும்: ஏனெனில் நீர் சாவினின்று பிழைக்க மாட்டீர்” என்றார்.
2
எசேக்கியா சுவர்ப் பக்கமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டு
3
ஆண்டவரை நோக்கி, “ஆண்டவரே! நான் எப்படி உம் திருமுன் முற்றிலும் நம்பிக்கைக்குரியவனாய் நடந்து கொண்டேன் என்பதையும், உமது பார்வையில் நேர்மையானதையே செய்தேன் என்பதையும் நினைத்தருளும்” என்று வேண்டுதல் செய்து கதறி அழுதார்.
4
எசாயா அரண்மனை முற்றத்தின் நடுப்பகுதியைக் கடப்பதற்குள், ஆண்டவரது வார்த்தை அவருக்கு வெளியாயிற்று:
5
“நீ திரும்பிப்போய் என் மக்களின் தலைவனான எசேக்கியாவை நோக்கி, 'உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் மன்றாட்டைக் கேட்டேன். உன் கண்ணீரையும் கண்டேன். இதோ உன்னைக் குணப்படுத்துவேன். இன்றைக்கு மூன்றாம் நாள் நீ ஆண்டவராகிய எனது இல்லத்துக்குச் செல்வாய்.
6
உனது ஆயுளுக்கு இன்னும் பதினைந்து ஆண்டுகள் கூட்டுவேன். மேலும் உன்னையும் இந்நகரையும் அசீரிய மன்னனின் கையினின்று விடுவிப்பேன். என் பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் இந்நகரைப் பாதுகாப்பேன்' என்று சொல்.”
7
அப்பொழுது எசாயா, “ஓர் அத்திப் பழ அடை கொண்டு வாருங்கள்” என்றார். அவர்களும் அவ்வாறு கொண்டுவந்து அவர் குணமடையும்படி அதைக் கட்டியின்மேல் வைத்தனர்.
8
எசேக்கியா எசாயாவை நோக்கி, “ஆண்டவர் எனக்கு நலம் அளிப்பார் என்பதற்கும், மூன்றாம் நாள் நான் கோவிலுக்குச் செல்வேன் என்பதற்கும் அவர் எனக்கு என்ன அடையாளம் கொடுப்பார்?” என்று கேட்டார்.
9
அதற்கு எசாயா, “ஆண்டவர் தாம் தந்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்பதைக் காட்ட அவர் உமக்குக் கொடுக்கும் அடையாளமாவது: இப்பொழுது நிழல் பத்துப் பாகை முன்னோக்கிப் போகவேண்டுமா? பின்னோக்கி வர வேண்டுமா?” என்று கேட்டார்.
10
அதற்கு எசேக்கியா, “நிழல் பத்துப் பாகை முன்னோக்கிப் போவது எளிது. எனவே நிழல் பத்துப் பாகை பின்னோக்கி வர வேண்டும்” என்றார்.
11
அப்பொழுது இறைவாக்கினர் எசாயா ஆண்டவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் ஆகாசின் நிழற்கடிகையில் பத்துப்பாகை முன்னோக்கிப் போயிருந்த நிழல் பத்துப் பாகை பின்னோக்கி வரச் செய்தார்.