20
அப்பொழுது ஆமோட்சின் மகன் எசாயா எசேக்கியாவிடம் ஆளனுப்பிச் சொன்னது: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: அசீரிய மன்னன் சனகெரிபைப் பற்றிய உன் வேண்டுதலைக் கேட்டேன்.
21
அவனக்கு எதிராக ஆண்டவர் கூறிய வார்த்தை இதுவே: கன்னிமகள் சீயோன் உன்னை இகழ்கிறாள்: உன்னைப் பார்த்து நகைக்கிறாள்: மகள் எருசலேம் பின் நின்று தலையசைக்கிறாள்.
22
யாரை நீ பழித்து இகழ்ந்தாய்? யாருக்கு எதிராய்க் குரல் எழுப்பினாய்? யாரை நீ இறுமாப்புடன் நோக்கினாய்? இஸ்ரயேலின் புனிதமானவரை அன்றோ!
23
நீ உன் தூதர்மூலம் என் தலைவரைப் பழித்துரைத்து, 'எண்ணற்ற என் தேர்களோடு நான் மலையுச்சிகளுக்கு லெபனோனின் சிகரங்களுக்கு ஏறிச் சென்றேன். வானளாவிய கேதுரு மரங்களையும் அங்கு நின்ற உயர்ந்த தேவதாரு மரங்களையும் வெட்டினேன். அதன் காடுகளின் மிக அடர்ந்த பகுதியான கடையெல்லைவரை சென்றேன்.
24
நான் அயல்நாடுகளில் கிணறு வெட்டி நீர் பருகினேன். எகிப்தின் நதிகளையெல்லாம் என் உள்ளங்கால்களினால் வற்றச் செய்தேன்' என்றாய்!
25
நீ கேட்டதில்லையோ? நான் தான் பல நாள்களுக்கு முன்பே இதை முடிவு செய்தேன். நான்தான் தொன்று தொட்டே இதைத் திட்டமிட்டேன். அரண்சூழ் நகர்களைப் பாழடைந்த கற்குவியலாக நீ ஆக்க வேண்டுமென்பதை இப்பொழுது நான்தான் நிறைவேறச் செய்தேன்.
26
அவற்றின் குடிமக்கள் வலிமை இழந்து கலக்கமுற்று அவமானமடைந்தனர்: வயல்வெளிப் புல் போலவும், கூரைகளில் முளைத்து வளருமுன்னே பட்டுப்போகும் பச்சைப் பூண்டு போலவும் ஆயினர்.
27
நீ இருப்பதும் போவதும் வருவதும் எனக்குத் தெரியும்; எனக்கு எதிராக நீ பொங்கி எழுவதையும் நான் அறிவேன்.
28
நீ எனக்கு எதிராகப் பொங்கி எழுந்தாலும் உன் ஆணவம் என் செவிகளுக்கு எட்டி உள்ளதாலும், உன் மூக்கில் வளையத்தையும் உன் வாயில் கடிவாளத்தையும் போட்டு, நீ வந்த வழியே உன்னைத் திருப்பி விரட்டுவேன்!
29
எசேக்கியா! இதோ உனக்கு ஓர் அடையாளம் தருகிறேன்: இவ்வாண்டு தானாக விளைவதை நீ உண்பாய்: அடுத்த ஆண்டு அதன் முளையிலிருந்து விளைவதை உண்பாய்: ஆனால் மூன்றாம் ஆண்டில் நீ விதைத்து அறுவடை செய்வாய்: திராட்சைச் செடிகளை நட்டு அவற்றின் கனிகளை உண்பாய்.
30
யூதா வீட்டில் எஞ்சியவை எல்லாம் கீழே வேரூன்றி மேலே பயன் அளிக்கும்.
31
ஏனெனில் எஞ்சியோர் எருசலேமிலிருந்து வெளியேறுவர். உயிர் பிழைத்தோர் சீயோன் மலையினின்று புறப்படுவர். படைகளின் ஆண்டவரது ஆர்வமே இதை நிறைவேற்றும்!
32
ஆதலால் ஆண்டவர் அசீரிய மன்னனைக் குறித்து இவ்வாறு கூறுகிறார்: இந்நகருக்குள் அவன் நுழையமாட்டான்: அதில் அம்பு எய்ய மாட்டான்: அதை எதிர்த்துக் கேடயத்துடன் வரமாட்டான். அதற்கு எதிராக முற்றுகைத்தளம் எழுப்ப மாட்டான்.
33
அவன் வந்த வழியே திரும்பிப் போவான்: இந்நகருக்குள் நுழையவே மாட்டான் என்கிறார் ஆண்டவர்.
34
இந்நகரை நான் பாதுகாப்பேன்: என் பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் நான் அதை விடுவிப்பேன்.”
35
அன்றிரவு ஆண்டவரின் தூதர் புறப்பட்டுச் சென்று அசீரியரின் பாளையத்தில் இலட்சத்து என்பத்தையாயிரம் பேரைக் கொன்றார். மக்கள் காலையில் எழுந்தபோது அங்கு அனைவரும் செத்துப் பிணமாய்க் கிடந்ததைக் கண்டனர்.
36
எனவே அசீரிய மன்னன் சனகெரிபு திரும்பிச் சென்று நினிவேயில் தங்கியிருந்தான்.
37
தன் தெய்வமாகிய நிஸ்ரோக்கின் கோவிலில் அவன் வழிபாடு செய்துகொண்டிருந்த பொழுது, அவன் புதல்வர்களாகிய அதிரம் மெலக்கும், சரேத்சரும் அவனை வாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, அரராத்து நாட்டிற்குத் தப்பி ஓடிவிட்டனர். அவனுடைய மகன் ஏசகத்தோன் அவனுக்குப்பின் அரசன் ஆனான்.