1
அரசர் எசேக்கியா இதைக் கேட்டு தம் ஆடைகளைக் கிழித்துவிட்டு சாக்கு உடை உடுத்திக் கொண்டு ஆண்டவரின் இல்லத்தினுள் நுழைந்தார்.
2
அரண்மனையின் மேலதிகாரியான எலியாக்கிமையும், எழுத்தன் செபுனாவையும், குருக்களில் முதியோரையும் சாக்கு உடை உடுக்கச் செய்து ஆமோசின் மகன் எசாயா இறைவாக்கினரிடம் அனுப்பினார்.
3
அவர்கள் அவரிடம், “எசேக்கியா கூறுவது இதுவே: இன்று துன்பமும் கண்டனமும் அவமானமும் மிக்க நாள். பிள்ளைகளைப் பெற்றெடுக்க நேரம் வந்துவிட்டது: ஆனால் பெற்றெடுக்கவோ வலிமையில்லை.
4
வாழும் கடவுளைப் பழித்து இகழும்படி அசீரிய மன்னனாகிய தன் தலைவனால் அனுப்பப்பட்ட இரப்சாக்கே சொன்னவற்றையெல்லாம் உம் கடவுளாகிய ஆண்டவர் கேட்டிருப்பார்! அச்சொற்களை முன்னிட்டு உம் கடவுளாகிய ஆண்டவர் அவனைத் தண்டிக்க வேண்டும். நீரோ இன்னும் இங்கு எஞ்சியிருப்போர்க்காக மன்றாடும்” என்றனர்.
5
அரசர் எசேக்கியாவின் அலுவலர் எசாயாவிடம் வந்தபொழுது,
6
எசாயா அவர்களை நோக்கி, “உங்கள் தலைவனிடம் இவ்வாறு சொல்லுங்கள். ஆண்டவர் கூறுவது இதுவே: அசீரிய மன்னனின் கைக்கூலிகள் என்னை இகழ்ந்து சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அஞ்சவேண்டாம்.
7
இதோ, நான் அவனிடம் ஓர் ஆவியை அனுப்புவேன். அவன் ஒரு வதந்தியைக் கேட்டுத் தன் நாட்டிற்குத் திரும்பி போய்விடுவான். அவனது நாட்டில் வாளால் வெட்டுண்டு அவன் இறக்கும்படி செய்வேன்” என்றார்.
8
அவ்வாறே, 'அசீரிய மன்னன் இலாக்கிசை விட்டு வெளியேறிவிட்டான்' என்று கேள்விப்பட்டு அங்கிருந்து கிளம்பிய இராப்சாக்கே தன் மன்னன் லிப்னாவுக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டான்.
9
அப்பொழுது, அசீரிய மன்னன், எத்தியோப்பிய மன்னனான திராக்கா தனக்கு எதிராய்ப் படைதிரட்டிக்கொண்டு வருவதாகக் கேள்வியுற்று எசேக்கியாவிடம் மீண்டும் தூதரை அனுப்பி,
10
“யூதா அரசன் எசேக்கியாவிடம் நீங்கள் இவ்வாறு கூறுங்கள்: 'எருசலேம் அசீரிய மன்னனின் கையில் ஒப்புவிக்கப்பட மாட்டாது' என்று கூறும் உன் கடவுளை நம்பி ஏமாந்துவிடாதே.
11
இதோ! அசீரியா மன்னர்கள் எல்லா நாடுகளுக்கும் செய்திருப்பதையும், அவற்றை முற்றிலும் அழித்ததையும் நீ கேள்விப்பட்டிருப்பாய். அப்படியிருக்க நீ மட்டும் தப்பிவிட முடியுமா?
12
என் முன்னோர்கள் அழித்துவிட்ட கோசான், ஆரான், இரட்சேபு, ஏதேனியர் வாழ்ந்த தெலாசர் ஆகியவற்றை அந்நாடுகளின் தெய்வங்களால் விடுவிக்க முடிந்ததா?
13
ஆமாத்தின் மன்னன் எங்கே? அர்பாதின் மன்னன் எங்கே? செபர்வயிம் நகர், ஏனா, இவ்வா இவற்றின் மன்னர்கள் எங்கே?” என்று கூறியிருந்தான்.
14
எசேக்கியா தூதரின் கையிலிருந்த மடலை வாங்கி வாசித்தபின் கோவிலினுள் சென்று ஆண்டவர் திருமுன் மடலை விரித்து வைத்தார்.
15
மேலும் எசேக்கியா ஆண்டவரை மன்றாடிக் கூறியது: “கெருபுகள்மேல் வீற்றிருக்கும் இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரே! இவ்வுலகத்து அரசுகளுக்கெல்லாம் நீர் ஒருவரே கடவுள்! விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே!
16
ஆண்டவரே! நீர் செவி சாய்த்துக் கேட்டருளும். ஆண்டவரே! உம் விழிகளைத் திறந்து என்னை நோக்கியருளும். தூதனுப்பி என்றுமுள கெரிபின் சொற்களைக் கேட்பீராக!
17
ஆண்டவரே! அசீரிய மன்னர்கள் வேற்றினத்தாரையும், அவர்கள் நாடுகளையும் அழித்தது உண்மைதான்!
18
அவர்கள் வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளை நெருப்பிலிட்டு எரித்தனர். ஏனெனில் அவை உண்மைக் கடவுளல்ல: மரத்தாலும் கல்லாலும் மனிதன் செய்தவையே: எனவே அவற்றை அழிக்க முடிந்தது.
19
எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! இப்பொழுது இவன் கையிலிருந்து எங்களைக் காத்தருளும். இதன் மூலம், நீர் ஒருவரே கடவுளாகிய ஆண்டவர் என்பதை உலகின் எல்லா அரசுகளும் அறிந்துகொள்ளும்.”