28
இதன்பின் இரப்சாக்கே எழுந்து நின்று யூத மொழியில் உரத்த குரலில் பேசலானான்: “மாவேந்தரான அசீரிய மன்னரின் வார்த்தையைக் கேளுங்கள்.
29
அவர் கூறுவது இதுவே: எசேக்கியா உங்களை ஏமாற்ற விடாதீர்கள். ஏனெனில் உங்களை என் கையிலிருந்து விடுவிக்க அவனால் முடியாது.
30
அவன், 'ஆண்டவர் நம்மை விடுவிப்பது உறுதி. இந்நகர் அசீரிய மன்னனின் கையில் ஒப்பவிக்கப்படாது' என்று கூறி உங்களை ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்ளச் செய்வான்.
31
எசேக்கியாவின் சொல்லுக்குச் செவி கொடாதீர்கள். ஏனெனில் அசீரிய மன்னர் கூறுவது இதுவே: நீங்கள் என்னோடு சமாதானம் செய்து கொண்டு வெளியே என்னிடம் வாருங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தம் சொந்த திராட்சைக் கொடியின் பழத்தைச் சுவைத்து, தம் சொந்த அத்திமரத்தின் பழத்தைத் தின்று, சொந்தக் கிணற்றின் தண்ணீரைக் குடிக்கலாம்.
32
பின் நான் வந்து உங்கள் நாட்டைப் போன்ற ஒரு நாட்டுக்கு, தானியமும் திராட்சைக் கனியும் மிக்க நாட்டுக்கு, அப்பமும் திராட்சைத் தோட்டமும் மிகுந்த நாட்டுக்கு, ஒலிவ மரங்களும் தேனும் மிகுந்த நாட்டுக்கு, உங்களை அழைத்துச் செல்வேன். நீங்கள் சாகாமல் உயிரோடு இருக்கப் பாருங்கள். ஆண்டவர் நம்மைக் காப்பார் என்று கூறி உங்களை ஏமாற்றும் எசேக்கியாவுக்குச் செவி கொடாதீர்கள்.