2இராஜாக்கள் 18:1-19 - WCV
1
இஸ்ரயேல் அரசன் ஏலாவின் மகன் ஓசேயா ஆட்சியேற்ற மூன்றாம் ஆண்டில், ஆகாசின் மகன் எசேக்கியா யூதாவின் அரசனானார்.
2
அப்போது அவருக்கு வயது இருபத்தைந்து. அவர் எருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். செக்கரியாவின் மகளாகிய அபி என்பவரே அவருடைய தாய்.
3
அவர் தம் தந்தை தாவீதைப் போலவே அனைத்திலும் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து வந்தார்.
4
அவர் தொழுகை மேடுகளை அழித்து, நடுகற்களைத் தகர்த்து அசேராக் கம்பத்தையும் வெட்டி வீழ்த்தினர். மோசேயால் செய்து வைக்கப்பட்டவெண்கலப் பாம்புச் சிலையையும் உடைத்தெறிந்தார். ஏனெனில் இஸ்ரயேல் மக்கள் அன்று வரை அதற்கத் தூபங்காட்டி வந்தனர். அது”நெகுஸ்தான்” என்று அழைக்கப்பட்டு வந்தது.
5
அவர் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரில் முழு நம்பிக்கை வைத்திருந்தார். அவருக்குப் பின்னோ அவருக்கு முன்னோ இருந்த யூதாவின் அரசர் அனைவரிலும், அவரைப்போல் வேறு எவரும் இருந்ததில்லை.
6
அவர் ஆண்டவர்மீது பற்றுக் கொண்டு அவரிடமிருந்து விலகாமல், ஆண்டவர் மோசேக்கு இட்ட கட்டளைகளைப் பின்பற்றினார்.
7
ஆதலால் ஆண்டவரும் அவரோடு இருந்தார். அவர் சென்றவிடமெல்லாம் சிறப்புற்றார். மேலும் அவர் அசீரிய மன்னனுக்கு எதிராக எழுந்து அவனுக்குப் பணிய மறுத்தார்.
8
அவர் பெலிஸ்தியரைக் காவல்மாடம் முதல் அரண் சூழ் நகரம் வரை, காசாவினின்றும் அதன் எல்லைக்குள்ளிருந்தும் விரட்டியடித்தார்.
9
இஸ்ரயேல் அரசன் ஏலாவின் மகனான ஓசேயா ஆட்சியேற்ற ஏழாவது ஆண்டில், அதாவது அரசர் எசேக்கியாவின் நான்காம் ஆட்சி ஆண்டில், அசீரிய மன்னன் சல்மனேசர் சமாரியாவுக்கு எதிராக வந்து அதை முற்றுகையிட்டான்.
10
மூன்று ஆண்டுகளின் முடிவில் அவன் அதைக் கைப்பற்றினான். அரசர் எசேக்கியா ஆட்சியேற்ற ஆறாம் ஆண்டில், அதாவது இஸ்ரயேல் அரசன் ஓசேயாவின் ஒன்பதாம் ஆட்சி ஆண்டில் சமாரியா கைப்பற்றப்பட்டது.
11
அசீரிய மன்னன் இஸ்ரயேலரை அசீரியாவுக்கு நாடு கடத்தினான்: அவர்களை அலகிலும், கோசானின் ஆபோர் நதிக்கரையிலும் மேதியர் நகர்களிலும் குடியேற்றினான்.
12
ஏனெனில், அவர்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுக்காமல், அவரது உடன்படிக்கையையும் ஆண்டவரின் ஊழியர் மோசே இட்ட கட்டளைகள் யாவற்றையும் மீறினார்கள். ஆவர்கள் செவிகொடுக்கவுமில்லை, கீழ்படியவுமில்லை.
13
எசேக்கியா ஆட்சியேற்ற பதினான்காம் ஆண்டில் அசீரிய மன்னன் சனகெரிபு யூதாவிலிருந்த அரண்சூழ் நகர்கள் அனைத்தையும் முற்றுகையிட்டுக் கைப்பற்றினான்.
14
அப்போது, யூதா அரசர் எசேக்கியா இலாக்கிசிலிருந்து அசீரிய மன்னனிடம் தூதனுப்பி, “நான் பாவம் செய்துவிட்டேன். எனவே என்னை விட்டுத் திரும்பிச் செல்லும். நீர் கேட்பதை நான் தந்து விடுகிறேன்” என்றார். அப்படியே அசீரிய மன்னன், யூதா அரசர் எசேக்கியாவை பன்னிரண்டாயிரம் கிலோ கிராம், வெள்ளியையும் ஆயிரத்து இருநூறு கிலோ கிராம் பொன்னும் செலுத்துமாறு கட்டளையிட்டான்.
15
எசேக்கியா ஆண்டவரது இல்லத்திலும், அரசரது அரண்மனைக் கருவூலங்களிலும் காணப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தார்.
16
இச்சமயம் யூதா அரசர் எசேக்கியா, ஆண்டவரின் இல்லக் கதவுகளிலும் கதவு நிலைகளிலும், தாம் பதித்திருந்த பொன் தகடுகளைக் கழற்றி அசீரிய மன்னனுக்குக் கொடுத்தார்.
17
ஆயினும் அசீரிய மன்னன் இலாக்கிசிலிருந்து தர்த்தானையும் இரப்சாரிசையும் இரப்சாக்கேயையும் பெரும் படையுடன் எருசலேமுக்கு அரசர் எசேக்கியாவுக்கு எதிராக அனுப்பினான். இவர்கள் புறப்பட்டு எருசலேமை வந்தடைந்து, வண்ணான் துறை வழியருகிலுள்ள மேல் குளத்துக் கால்வாய் அருகே நின்றனர்.
18
அப்பொழுது அவர்கள் அரசரைத் தங்களிடம் அழைத்தனர். ஆனால் அரண்மனையின் மேலாளனும் இல்க்கியாவின் மகனுமான எலியாக்கிமும், எழுத்தனான செபுனாவும் அரசருடைய பதிவாளனும் ஆசாபின் மகனுமான யோவாகும் அவர்களைச் சந்திக்கச் சென்றனர்.
19
அப்பொழுது, இரப்சாக்கே அவர்களைப் பார்த்து, “நீங்கள் எசேக்கியாவுக்குக் கீழ்கண்டவாறு கூறுங்கள்: பேரரசராகிய அசீரிய மன்னர் கூறுவது இதுவே: