2இராஜாக்கள் 17:7-18 - WCV
7
ஏனெனில், இஸ்ரயேல் மக்கள் தங்களை எகிப்து நாட்டினின்றும் அந்நாட்டு மன்னன் பார்வோனின் கையினின்றும் விடுவித்திருந்த தங்கள் கடவுளான ஆண்டவருக்கு எதிராய்ப் பாவம் செய்து வேற்றுத் தெய்வங்களைத் தொழுது வந்தனர்.
8
மேலும் இஸ்ரயேல்மக்கள் முன்னிலையிலிருந்து ஆண்டவர் விரட்டியடித்த வேற்றினத்தாரின் விதிமுறைகளின்படியும். இஸ்ரயேல் அரசர்கள் புகுத்திய வழக்கங்களின்படியும் நடந்து வந்தனர்.
9
இஸ்ரயேல் மக்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகத் தகாதனவற்றை மறைவாய்ச் செய்தனர்: மேலும் காவல் மாடம் முதல் அரண்சூழ் கோட்டைவரை எல்லா நகர்களிலும் தங்களுக்குத் தொழுகை மேடுகளை அமைத்துக் கொண்டனர்:
10
உயர் குன்றுகளிலும், பசுமையான மரங்களின் அடியிலும், நடுகற்களையும், அசேராக் கம்பங்களையும் அமைத்துக் கொண்டனர்.
11
அங்கு அவர்கள் தூபம் காட்டி அம்மேடுகள் அனைத்திலும், ஆண்டவர் அவர்கள் முன்னிலையிலிருந்து விரட்டியடித்த வேற்றினத்தாரைப் போல் தீயன புரிந்து, ஆண்டவருக்குச் சினமூட்டினர்.
12
'இக்காரியத்தை நீங்கள் செய்யலாகாது' என ஆண்டவர் அவர்களுக்கு உரைத்திருந்தாலும், அவர்கள் சிலைகளை வழிபட்டு வந்தனர்.
13
ஆயினும் ஆண்டவர் எல்லா இறைவாக்கினர், திருக்காட்சியாளர் மூலம் இஸ்ரயேலுக்கும் யூதாவுக்கும் விடுத்திருந்த எச்சரிக்கை இதுவே: “உங்கள் தீய வழிகளை விட்டுத் திரும்புங்கள். உங்கள் மூதாதையருக்கு நான் கட்டளையிட்டு என் அடியார்களாகிய இறைவாக்கினர் மூலம் நான் அறிவித்த திருச்சட்டத்தின்படி என் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடியுங்கள்.”
14
ஆனால் அவர்களோ செவிகொடுக்கவில்லை. அவர்கள் மூதாதையர் தங்கள் ஆண்டவர் மீது நம்பிக்கை இழந்து பணிய மறுத்தது போல, அவர்களும் வணங்காக் கழுத்தர்களாக இருந்தனர்:
15
ஆண்டவரின் நியமங்களையும், தங்கள் மூதாதையரோடு அவர் செய்திருந்த உடன்படிக்கையையும், தங்களுக்கு அவர் விடுத்திருந்த எச்சரிக்கைகளையும் புறக்கணித்த, வீணானவற்றைப் பின்பற்றி வீணர் ஆயினர்: 'வேற்றினத்தாரைப் பின்பற்றலாகாது' என்று ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக, தங்களைச் சூழ்ந்திருந்த அவர்களைப் பின்பற்றி நடந்தனர்.
16
தங்கள் கடவுளான ஆண்டவரின் எல்லாக் கட்டளைகளையும் கைவிட்டனர்: இரண்டு கன்றுகளைத் தங்களுக்கென வார்த்துக்கொண்டு, அசேராக் கம்பம் நிறுத்தி, வானத்தின் அணிகளுக்குத் தலைவணங்கி, பாகாலை வழிபட்டனர்:
17
தங்கள் புதல்வரையும், புதல்வியரையும் நெருப்பில் பலியிட்டனர். குறிகேட்டும் சூனியம் வைத்தும் வந்தனர்: ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்து அவருக்குச் சினமூட்டுமாறு தங்களையே விற்று விட்டனர்.
18
எனவே ஆண்டவர் இஸ்ரயேலின்மேல் மிகவும் சினமுற்று, அவர்களைத் தம் திருமுன்னின்று தள்ளி விட்டார். யூதா குலத்தார் மட்டுமே எஞ்சியிருந்தனர்.