2இராஜாக்கள் 17:13-23 - WCV
13
ஆயினும் ஆண்டவர் எல்லா இறைவாக்கினர், திருக்காட்சியாளர் மூலம் இஸ்ரயேலுக்கும் யூதாவுக்கும் விடுத்திருந்த எச்சரிக்கை இதுவே: “உங்கள் தீய வழிகளை விட்டுத் திரும்புங்கள். உங்கள் மூதாதையருக்கு நான் கட்டளையிட்டு என் அடியார்களாகிய இறைவாக்கினர் மூலம் நான் அறிவித்த திருச்சட்டத்தின்படி என் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடியுங்கள்.”
14
ஆனால் அவர்களோ செவிகொடுக்கவில்லை. அவர்கள் மூதாதையர் தங்கள் ஆண்டவர் மீது நம்பிக்கை இழந்து பணிய மறுத்தது போல, அவர்களும் வணங்காக் கழுத்தர்களாக இருந்தனர்:
15
ஆண்டவரின் நியமங்களையும், தங்கள் மூதாதையரோடு அவர் செய்திருந்த உடன்படிக்கையையும், தங்களுக்கு அவர் விடுத்திருந்த எச்சரிக்கைகளையும் புறக்கணித்த, வீணானவற்றைப் பின்பற்றி வீணர் ஆயினர்: 'வேற்றினத்தாரைப் பின்பற்றலாகாது' என்று ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக, தங்களைச் சூழ்ந்திருந்த அவர்களைப் பின்பற்றி நடந்தனர்.
16
தங்கள் கடவுளான ஆண்டவரின் எல்லாக் கட்டளைகளையும் கைவிட்டனர்: இரண்டு கன்றுகளைத் தங்களுக்கென வார்த்துக்கொண்டு, அசேராக் கம்பம் நிறுத்தி, வானத்தின் அணிகளுக்குத் தலைவணங்கி, பாகாலை வழிபட்டனர்:
17
தங்கள் புதல்வரையும், புதல்வியரையும் நெருப்பில் பலியிட்டனர். குறிகேட்டும் சூனியம் வைத்தும் வந்தனர்: ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்து அவருக்குச் சினமூட்டுமாறு தங்களையே விற்று விட்டனர்.
18
எனவே ஆண்டவர் இஸ்ரயேலின்மேல் மிகவும் சினமுற்று, அவர்களைத் தம் திருமுன்னின்று தள்ளி விட்டார். யூதா குலத்தார் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
19
யூதா குலத்தாரும் தங்கள் கடவுளான ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிக்காது, இஸ்ரயேலின் விதிமறைகளைப் பின்பற்றி வந்தனர்.
20
எனவே ஆண்டவர் இஸ்ரயேலின் வழிமரபினர் அனைவரையும் கைவிட்டு, அவர்களை ஒடுக்கி, கொள்ளைக்காரரின் கையில் ஒப்புவித்து, தமது திருமுன்னின்று தள்ளிவிட்டார்.
21
அவர் இஸ்ரயேலைத் தாவீதின் மரபினின்று வெட்டிப் பிரித்தபோது நெபாற்றின் மகன் எரொபவாமைத் தங்களுக்கு அரசனாக ஏற்படுத்திக் கொண்டனர். எரொபவாம் இஸ்ரயேலர் ஆண்டவரை விட்டு விலகும்படி செய்து, அவர்களைப் பெரும் பாவத்திற்கு உள்ளாக்கியிருந்தான்.
22
இவ்வாறு எரொபவாம் நடந்த பாவ வழிகளில் அனைத்திலும் இஸ்ரயேல் மக்கள் நடந்து வந்தனர். அவற்றை விட்டு அவர்கள் விலகவில்லை.
23
ஆண்டவர் தம் அடியாரான இறைவாக்கினர் அனைவரின் வாயிலாக உரைத்திருந்தபடி, அவர்களைத் தமது திருமுன்னின்று முற்றும் தள்ளிவிடும் வரை, அவர்கள் அந்தப் பாவ வழிகளைவிட்டு விலகவில்லை. எனவே இஸ்ரயேலர் தமது சொந்த நாட்டினின்று அசீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, இன்றுவரை அங்கேயே இருக்கின்றனர்.