1
ஆகாபிற்குச் சமாரியாவில் எழுபது மைந்தர்கள் இருந்தனர். ஆதலால் ஏகூ சமாரியாவின் தலைவர்களுக்கும் இஸ்ரயேலின் பெரியோர்களுக்கும் ஆகாபின் மைந்தர்களின் காப்பாளர்களுக்கும் எழுதி அனுப்பிய மடல் இதுவே:
2
“இம்மடல் உங்களை வந்தடைந்தவுடன் உங்கள் தலைவரின் மைந்தர்கள் உங்களோடு இருப்பதாலும், தேர்களும், குதிரைகளும் அரண்சூழ் நகரும் படைக்கலங்களும் உங்களிடமிருப்பதாலும்,
3
உங்கள் தலைவரின் மைந்தர்களுள் சிறந்தவனும் தகுதி உடையவனுமான ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனுடைய தந்தையின் அரியணையில் அமர்த்தி, உங்கள் தலைவரின் குடும்பத்தைக் காப்பாற்றப் போராடுங்கள்.”
4
ஆனால் அவர்கள் மிகமிக அச்சமுற்று, “அவனை எதிர்த்து நிற்க, இரண்டு அரசர்களால் முடியவில்லையே! அப்படியிருக்க, நாம் எங்ஙனம் எதிர்த்து நிற்க கூடும்?” என்றனர்.
5
எனவே அரண்மனை மேற்பார்வையாளனும், நகரின் ஆளுநனும், பெரியோர்களும், ஆகாபின் மைந்தர்களின் காப்பாளர்களும், ஏகூவிடம் தூதனுப்பித் தெரிவித்ததாவது: “நாங்கள் உம் அடிமைகள். நீர் கட்டளையிடுவதை எல்லாம் நாங்கள் செய்யக் காத்திருக்கிறோம். நாங்கள் யாரையும் அரசனாக்கப் போவதில்லை உமக்கு நல்லதென்றுபடுவதையே செய்தருளும்” என்று தெரிவித்தனர்.
6
அவன் மீண்டும் அவர்களுக்குக் கீழ்க்கண்டவாறு மற்றொரு மடல் அனுப்பினான்: “நீங்கள் எனக்குக் கட்டுப்பட்டு எனக்குக் கீழ்ப்படியத் தயாராய் இருந்தால், உங்கள் தலைவருடைய மைந்தர்களின் தலைகளைக் கொய்து, நாளை இதே நேரத்தில் என்னிடம் இஸ்ரயேலுக்குக் கொண்டு வாருங்கள்.” அச்சமயம் அரசனின் மைந்தர் எழுபது பேரும் தங்களை வளர்த்து வந்த நகரப் பெரியோரோடுதான் இருந்தனர்.
7
அம்மடலை அவர்கள் பெற்றுக்கொண்டவுடன், அரசனின் மைந்தர்களைப் பிடித்து அந்த எழுபது பேரையும் கொன்று, அவர்களின் தலைகளைக் கூடைகளில் வைத்து ஏகூவிடம் இஸ்ரயேலுக்கு அனுப்பி வைத்தனர்.