10
எலியா ஐம்பதின்மர் தலைவனுக்கு மறுமொழியாக, “நான் உண்மையாகவே கடவுளின் அடியவனாய் இருந்தால், வானினின்று நெருப்பு இறங்கி வந்து உன்னையும் உன்னோடு இருக்கும் ஐம்பது பேரையும் சுட்டெரிக்கும்!” என்றார். உடனே வானினின்று நெருப்பு இறங்கி வந்து அவனையும் அவனோடிருந்த ஐம்பது பேரையும் சுட்டெரித்தது.
11
அகசியா மீண்டும் வேறொரு தலைவனை அவனுடைய வீரரோடு அனுப்பினான். அத்தலைவனும் மேலேறிச் சென்று எலியாவிடம், “கடவுளின் அடியவரே! விரைவாய் கீழே இறங்கி வாரும்: இது அரச கட்டளை!” என்றான்.
12
எலியா மறுமொழியாக, “நான் உண்மையாகவே கடவுளின் அடியவனாய் இருந்தால், வானினின்று நெருப்பு இறங்கி வந்து உன்னையும் உன்னோடு இருக்கும் ஐம்பது பேரையும் சுட்டெரிக்கட்டும்!” என்றார். உடனே வானினின்று நெருப்பு இறங்கிவந்து, அவனையும் அவனோடிருந்த ஐம்பது பேரையும் சுட்டெரித்தது.
13
அகசியா மூன்றாம் முறையாகத் தலைவன் ஒருவனை அவனுடைய ஐம்பது வீரரோடு அனுப்பினான். மூன்றாம் தலைவனும் மேலேறிச் சென்று, எலியாவின் முன் முழந்தாளிட்டு, “கடவுளின் அடியவரே! என் உயிரையும், உம் அடியாராகிய இந்த ஐம்பதின்மர் உயிரையும் காத்தருளும்!
14
வானினின்று நெருப்பு இறங்கி வந்து, முன்னைய ஐம்பதின்மர் தலைவர் இருவரையும் அவரவருடைய ஐம்பது வீரர்களையும் சுட்டெரித்து விட்டது. எனவே, இப்பொழுது என் உயிரைக் காத்தருளும்!” என்று மன்றாடினான்.