47
அப்படிக் கொண்டு செல்லப்பட்ட நாட்டில் உணர்வு பெற்று, மனம் மாறி“நாங்கள் பாவம் செய்தோம்: நெறி தவறினோம்: தீய வழியில் நடந்தோம் “ என்று விண்ணப்பம் செய்தால்,
48
தங்களைக் கைதிகளாகக் கொண்டு சென்ற பகைவரின் நாட்டில் தங்கள் முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உம்மிடம் திரும்பி வந்து, நீர் அவர்கள் மூதாதையர்க்கு அளித்த தங்கள் நாட்டையும், நீர் தேர்ந்து கொண்ட இந்நகரையும், உமது பெயருக்கு நான் கட்டியுள்ள இந்தக் கோவிலையும் நோக்கி நின்று, உம்மிடம் வேண்டுதல் செய்தால்,
49
உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் அவர்களுடைய வேண்டுதலுக்கும் விண்ணப்பத்திற்கும் செவிசாய்த்து அவர்களுக்கு நீதி வழங்குவீராக! உமக்கு எதிராகப் பாவம் செய்த உம் மக்களை மன்னிப்பீராக! உமக்கு எதிராக அவர்கள் செய்த எல்லாத் தவறுகளையும் மன்னிப்பீராக!
50
அவர்களைக் கைதிகளாகக் கொண்டு சென்றவர்களின் பார்வையில் நீர் அவர்களுக்குக் கருணை காட்டும்! இதனால் அவர்களும் உம் மக்களுக்குக் கருணை காட்டுவார்களாக!