1இராஜாக்கள் 21:9-21 - WCV
9
அம்மடல்களில் அவள்,“நீங்கள் ஒரு நோன்பு அறிவித்து நாபோத்தை மக்கள் முன்னிலையில் அமரச் செய்யுங்கள்.
10
அவனுக்கு எதிராய் இழி மனிதர் இருவரை ஏவி விட்டு, 'நீ கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தாய்' என்று அவன் மீது குற்றம் சாட்டச்செய்யுங்கள். பின்னர் அவனை வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்றுபோடுங்கள் “ என்று எழுதியிருந்தாள்.
11
நாபோத்துடன் அந்நகரில் குடியிருந்த பெரியோரும் உயர்குடி மக்களும் ஈசபேல் தமக்கு அனுப்பிய மடல்களில் எழுதி இருந்தவாறே செய்தனர்.
12
அவர்கள் ஒரு நோன்பு அறிவித்து, நாபோத்தை மக்கள் முன்னிலையில் அமர்த்தினர்.
13
அப்பொழுது அந்த இழி மனிதர் இருவரும் வந்து நாபோத்துக்கு எதிரே உட்கார்ந்தனர். அந்த இழி மனிதர் மக்களைப் பார்த்து,“நாபோத்து கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தான் “ என்று அவன் மீது குற்றம் சாட்டினர். எனவே, அவர்கள் அவனை நகருக்கு வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்றனர்.
14
பிறகு“அவர்கள் நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்தான் “ என்று ஈசபேலுக்குச் செய்தி அனுப்பினர்.
15
நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்ததை ஈசபேல் கேட்டவுடன் அவள் ஆகாபை நோக்கி,“நீர் எழுந்து சென்று இஸ்ரயேலனாகிய நாபோத்து உமக்கு விற்க மறுத்த அதே திராட்சைத் தோட்டத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளும்: நாபோத்து உயிரோடில்லை: அவன் இறந்து போனான் “ என்றாள்.
16
நாபோத்து இறந்துபோனதை ஆகாபு கேட்டு, இஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை உடைமையாக்கிக் கொள்ளப் புறப்பட்டுப் போனான்.
17
அந்நேரத்தில் திஸ்பேயரான எலியாவுக்கு ஆண்டவர் உரைத்தவாக்கு:
18
“நீ புறப்பட்டு, சமாரியவிலிருந்து ஆட்சிசெய்யும் இஸ்ரயேலின் அரசன் ஆகாபைப் போய்ப் பார். அவன் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைத் தன் உடைமையாக்கிக் கொள்ள அங்குப் போயிருக்கிறான்.
19
நீ அவனிடம் சொல்ல வேண்டியது: ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ கொலை செய்து, கொள்ளையடித்திருக்கிறாய் இல்லையா? எனவே, நீ அவனிடம் சொல்ல வேண்டியது. ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கிய அதே இடத்தில் அவை உனது இரத்தத்தையும் நக்கும். “
20
அப்போது ஆகாபு எலியாவை நோக்கி,“என் எதிரியே! என்னைக் கண்டுபிடித்து விட்டாயா? “ என்று கேட்டான். அதற்கு அவர்“ஆம், நான் கண்டுபிடித்துவிட்டேன். ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்யும் அளவுக்கு உன்னையே விற்றுவிட்டாய்.
21
இதோ! நான் உனக்குத் தீங்கு வரச் செய்வேன். உனது வழிமரபை ஒழித்து விடுவேன்.உரிமை மக்களாகினும், அடிமைகளாயினும், இஸ்ரயேல் ஆண்மக்களை ஆகாபிடமிருந்து வெட்டி எறிவேன்.