5
இஸ்ரயேலின் இரு படைத்தலைவர்களான நேரின் மகன் அப்னேர், எத்தேரின் மகன் அமாசா ஆகியோருக்கு செரூயாவின் மகன் யோவாபு செய்ததும் அதனால் எனக்கு நேர்ந்ததும் உனக்குத் தெரியும். அவன், போர்க்காலத்தில் சிந்தப்பட்ட இரத்தத்திற்குப் பழிவாங்கச் சமாதான காலத்தில் அவர்களைக் கொன்றான். அவ்வாறு செய்து, அவன் தன் அரைக்கச்சையிலும் தன் மிதியடிகளிலும் இரத்தக்கறை படியச் செய்தான்.
6
ஆகையால் அவனுடன் விவேகமாய் நடந்துகொள். அவன் நரைமுடியனாய் மன அமைதியுடன் பாதாளத்தில் இறங்க விட்டுவிடாதே.
7
கிலயாதைச் சார்ந்த பர்சில்லாயின் மைந்தர்களுக்கோ இரக்கம் காட்டு. உன் பந்தியில் உண்பவர்களோடு அவர்களும் இருக்கட்டும். ஏனெனில் உன் சகோதரன் அப்சலோமுக்கு அஞ்சி நான் ஓடியபொழுது எனக்கு அவர்கள் துணைநின்றார்கள். இன்னும் கேள்.
8
பகுரிம் ஊரைச் சார்ந்த பென்யமினனாகிய கேராவின் மகன் சிமயி உன்னோடு இருக்கிறான் அல்லவா? அவன், மகனயிமுக்கு நான் சென்றபோது, மிகவும் இழிவான முறையில் பேசி என்னைச் சபித்தான். ஆயினும் யோர்தானுக்கு அருகில் என்னைச் சந்திக்க வந்தபோது, 'உன்னை வாளால் கொல்லமாட்டேன்' என்று ஆண்டவர்மேல் ஆணையிட்டு அவனுக்கு நான் சொன்னேன்.
9
எனினும் நீ அவனைக் குற்றமற்றவனென எண்ணி விடாதே. நீ விவேகமுள்ளவன். அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று உனக்குத் தெரியும். அவன் நரைமுடியாய் இரத்தத்தில் தோய்ந்து பாதாளத்தில் இறங்கும்படி செய். “