24
பின்னர் அவன் செமேர் என்பவனிடமிருந்து 'சமாரியா' என்ற மலையை ஏறத்தாழ எண்பது கிலோ எடையுள்ள வெள்ளிக்கு வாங்கினான். அம்மலையின் முன்னாள் உரிமையாளனான செமேரின் பெயரையொட்டி அந்நகருக்குச் 'சமாரியா' என்று பெயரிட்டான்.
25
ஓம்ரி ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். அவன் தனக்கு முன்பிருந்த எல்லாரையும் விட மிகவும் தீயவனாய் இருந்தான்.
26
அவன் நெபாற்றின் மகன் எரொபவாமின் எல்லா வழிகளிலும் நடந்து, இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாய் இருந்து, சிலை வழிபாட்டினால் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் சினமூட்டினான்.
27
ஓம்ரியின் பிறசெயல்களும் அவனுடைய வீரச் செயல்களும் 'இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
28
ஓம்ரி தன் மூதாதையரோடு துயில் கொண்டு சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் ஆகாபு அரசன் ஆனான்.
29
யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற முப்பத்தெட்டாம் ஆண்டில், ஓம்ரியின் மகன் ஆகாபு இஸ்ரயேலை அரசாளத் தொடங்கினான். அவன் சமாரியாவில் இருந்துகொண்டு இஸ்ரயேலின்மீது இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான்.