7
நீ எரொபவாமிடம் போய், 'இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: மக்களிடையே நான் உன்னை உயர்த்தினேன். என் மக்களாகிய இஸ்ரயேலருக்கு உன்னைத் தலைவனாக்கினேன்.
8
தாவீதின் வீட்டினின்று அரசைப் பிடுங்கி, அதை உன் கையில் ஒப்படைத்தேன். ஆயினும் என் ஊழியன் தாவீதைப் போல் நீ நடந்து கொள்ளவில்லை. அவன் என் விதிமுறைகளைக் கைக்கொண்டு, நான் காட்டிய வழியில் தன் முழு இதயத்தோடு நடந்து, என் பார்வையில் ஏற்புடையவற்றை மட்டுமே செய்தான். நீயோ அவ்வாறு செய்யவில்லை.
9
அது மட்டுமின்றி, உனக்கு முன் ஆட்சியில்இருந்த எல்லாரையும் விட நீ மிகுதியான தீமைகளைச் செய்துள்ளாய். நீ போய் வேற்றுத் தெய்வங்களை, வார்ப்புச் சிலைகளை உனக்கென உருவாக்கிக் கொண்டு என்னை ஒதுக்கிக் தள்ளினாய்: எனக்குச் சின மூட்டினாய்: ஆகையால் எரொபவாம் வீட்டுக்கு அழிவு வரும்.
10
இஸ்ரயேலில் அடிமையாகவோ, குடிமகனாகவோ உள்ள எரொபவாமின் ஆண் மக்கள் அனைவரையும் அழித்து விடுவேன். குப்பையை எரித்து ஒன்றும் இல்லாமல் ஆக்குவது போல், எரொபவாமின் வீட்டை அறவே அழித்தொழிப்பேன்.
11
எரொபவாமைச் சார்ந்தவருள் நகரில் மடிபவர்கள் நாய்களுக்கு இரையாவர்: வயல் வெளியில் மடிபவர் வானத்துப் பறவைகளுக்கு இரையாவர், இது ஆண்டவர் தரும் வாக்கு. நீ புறபப்பட்டு உன் வீட்டிற்குப் போ.
12
நீ நகரினுள் கால் வைத்தவுடன் உன் பிள்ளை இறந்து போவான்.
13
அவனுக்காக இஸ்ரயேலர் அனைவரும் துக்கம் கொண்டாடி அவனை அடக்கம் செய்வர். எரொபவாமின் வீட்டில் அவன் ஒருவன் மட்டுமே இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு உகந்தவனாய் இருந்ததால், அவன் மட்டும் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவான்.
14
ஆண்டவர்தாமே இஸ்ரயேலுக்கு ஓர் அரசன் எழுப்புவார். அவன் இன்றே, இப்போதே எரொபவாமின் வீட்டை அழித்து விடுவான்.
15
ஆண்டவர் இஸ்ரயேலரைத் தண்டிப்பார்”: தண்ணீரில் நாணல் போல் அவர்கள் அலைக்கழிக்கப்படுவார்கள்: அவர்களுடைய மூதாதையருக்குத் தாம் வழங்கியிருந்த நல்ல நாட்டிலிருந்து இஸ்ரயேலரை வேரோடு பிடுங்குவார்: அவர்களை யூப்பிரத்தீசு ஆற்றுக்கு அப்பால் சிதறடிப்பார்: ஏனெனில் அவர்கள் அசேராக் கம்பங்கள் செய்து, ஆண்டவருக்குச் சினமூட்டினர்.
16
எரொபவாம் செய்த பாவத்திற்காகவும், அவன் காரணமாக இஸ்ரயேல் செய்த பாவத்திற்காகவும் ஆண்டவர் இஸ்ரயேலைக் கைவிட்டு விடுவார். “