ஆதியாகமம் 41:33-44 - WCV
33
எனவே, பார்வோன் உடனடியாக மதிநுட்பமும் ஞானமும் செறிந்த ஒருவனைக் கண்டுபிடித்து எகிப்து நாட்டின் அதிகாரியாக அமர்த்தவேண்டும்.
34
மேலும், ஏழு வளமான ஆண்டுகளில் எகிப்து நாட்டின் விளைச்சலில் ஐந்திலொரு பகுதியைக் கொள்முதல் செய்யுமாறு மேற்பார்வையாளர்களையும் பார்வோன் தொடர்ந்து நியமிக்கட்டும்.
35
வரவிருக்கும் வளமான இந்த ஆண்டுகளிலேயே, தானியம் முழுவதையும் பார்வோனின் அதிகாரத்தில் அவர்கள் கொள்முதல் செய்து, பின்னர் உண்ணக் கொடுப்பதற்கென நகர்களில் சேமித்து வைக்கட்டும்.
36
எகிப்து நாட்டில் பஞ்சம் வரவிருக்கும் ஏழாண்டுகளில் பயன்படுத்துமாறு தானியம் இவ்வாறு சேமித்து வைக்கப்படட்டும்.நாடும் பஞ்சத்தினால் அழியாதிருக்கும்” என்றார்.
37
அவர் சொன்னது பார்வோனுக்கும் அவன் அலுவலர் அனைவருக்கும் நலமெனத் தோன்றியது.
38
பார்வோன்தன் அலுவலர்களை நோக்கி, “இறையாவி பெற்றுள்ள இவரைப் போல் வேறெவரையும் நாம் காணமுடியுமோ?” என்றான்.
39
பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி, “இவற்றையெல்லாம் கடவுள் உம் ஒருவருக்கே அறிவித்துள்ளார்.உம்மைவிட மதி நுட்பமும் ஞானமும் செறிந்தவர் யாருமிலர்.
40
எனவே, நீரே என் அரண்மனையின் பொறுப்பை ஏற்பீர்.உம் வார்த்தைக்கு என் மக்கள் எல்லோரும் அடிபணியட்டும்.அரியணையில் மட்டும் நான் உமக்கு மேற்பட்டவனாய் இருப்பேன்” என்றான்.
41
பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி, “இதோ! எகிப்து நாடு முழுவதற்கும் உம்மை அதிகாரியாக நியமிக்கிறேன்” என்று சொன்னான்.
42
உடனே பார்வோன் தன்கையில் அணிந்திருந்த அரச கணையாழியைக் கழற்றி அதை யோசேப்பு கையில் அணிவித்து, அவருக்குப் பட்டாடை உடுத்தி, பொன் கழுத்தணியை அவருக்கு அணிவித்தான்.
43
மேலும் அவரைத் தன் இரண்டாம் தேரில் வலம்வரச் செய்து “இவருக்கு முழந்தாளிடுங்கள்” என்று ஏவலர் கட்டியம் கூறச் செய்தான்: இவ்வாறு எகிப்து நாடு முழுவதற்கும் அவரை அதிகாரியாக்கினான்.
44
மேலும் அவன் யோசேப்பை நோக்கி, “பார்வோனாகிய நான் கூறுகிறேன்.உமது ஒப்புதலின்றி எகிப்து நாடெங்கும் எவனும் கையையோ காலையோ உயர்த்தக்கூடாது” என்றான்.