ஆதியாகமம் 37:2-11 - WCV
2
யாக்கோபின் குடும்ப வரலாறு இதுவே: யோசேப்பு பதினேழு வயது இளைஞனாய் இருந்தபோது, தம் தந்தையின் மறு மனைவியரான பிலகா, சில்பா என்பவர்களுடையபுதல்வர்களான தம் சகோதரரோடு மந்தை மேய்த்துக் கொண்டிருந்தார்.அவர் தம் சகோதரர் செய்து வந்த தீச்செயலைப் பற்றித் தம் தந்தைக்குத் தகவல் கொடுத்தார்.
3
இஸ்ரயேல் முதிர்ந்த வயதில் தமக்கு யோசேப்பு பிறந்தமையால் அவரை மற்றெல்லாப் புதல்வரையும் விட அதிகமாக நேசித்து வந்தார்.அவருக்கு அழகு வேலைப்பாடுகள் நிறைந்த ஓர் அங்கியைச் செய்து கொடுத்தார்.
4
அவருடைய சகோதரர்கள் தங்கள் தந்தை அவரை எல்லாரிலும் அதிகமாய் நேசிக்கிறாரென்று கண்டு அவரை வெறுத்தனர்.அவர்களால் அவரோடு பாசத்துடன் பேச இயலவில்லை.
5
யோசேப்பு தாம் கண்ட ஒரு கனவைத் தம் சகோதரருக்குத் தெரிவித்தார்.இதனால் அவர்கள் அவரை மேலும் அதிகமாய் வெறுத்தனர்.
6
அவர் அவர்களை நோக்கி, “நான் கண்ட இந்தக் கனவைக் கேளுங்கள்.
7
நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டும் பொழுது திடீரென எனது அரிக்கட்டு எழுந்து நிற்க, உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கின” என்றார்.
8
அப்பொழுது அவர் சகோதரர் அவரை நோக்கி, “நீ எங்கள் மீது உண்மையிலேயே ஆட்சி செலுத்தப்போகிறாயோ? நீ எங்கள் மீது உண்மையிலேயே அதிகாரம் செலுத்தப் போகிறாயோ?” என்று கேட்டனர்.இவ்விதக் கனவுகளின் காரணமாகவும் அவருடைய தகவல்களின் காரணமாகவும் அவரை அவர்கள் இன்னும் அதிகமாய் வெறுத்தனர்.
9
மேலும் அவர் தாம் கண்ட வேறொரு கனவையும் தம் சகோதரர்களுக்கு விவரித்தார். “நான் மீண்டும் ஒரு கனவு கண்டேன்: அதில் கதிரவனும் நிலவும் பதினொரு விண்மீன்களும் என்னை வணங்கக் கண்டேன்” என்றார்.
10
இதை அவர் தம் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் விவரித்தபோது, அவர் தந்தை அவரைக் கண்டித்து, “நீ கண்ட இந்தக் கனவின் பொருள் என்ன? நானும் உன் தாயும், உன் சகோதரர்களும் தரைமட்டும் தாழ்ந்து உன்னை வணங்க வேண்டுமா?” என்று கேட்டார்.
11
அதன் பொருட்டும் அவர் சகோதரர் அவர் மீது பொறாமை கொண்டனர். அவர் தந்தையோ இக்காரியத்தைத் தம் மனத்தில் கொண்டார்.