17
என் கை அல்ல, பெலிஸ்தரின் கையே அவன்மேல் விழட்டும் என்று சவுல் நினைத்துக்கொண்டு, சவுல் தாவீதை நோக்கி: இதோ, என் மூத்த குமாரத்தியாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன்; நீ எனக்கு நல்ல சேவகனாய் மாத்திரம் இருந்து, கர்த்தருடைய யுத்தங்களை நடத்து என்றான்.
18
அப்பொழுது தாவீது சவுலைப் பார்த்து: ராஜாவுக்கு மருமகனாகிறதற்கு நான் எம்மாத்திரம், என் ஜீவன் எம்மாத்திரம், இஸ்ரவேலிலே என் தகப்பன் வம்சமும் எம்மாத்திரம் என்றான்.
19
சவுலின் குமாரத்தியாகிய மேராப் தாவீதுக்குக் கொடுக்கப்படுங்காலம் வந்தபோது, அவள் மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள்.
20
சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள்; அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்குச் சந்தோஷமாயிருந்தது.
21
அவள் அவனுக்குக் கண்ணியாயிருக்கவும், பெலிஸ்தரின் கை அவன்மேல் விழவும், அவளை அவனுக்குக் கொடுப்பேன் என்று சவுல் எண்ணி, தாவீதை நோக்கி: நீ என்னுடைய இரண்டாம் குமாரத்தியினால் இன்று எனக்கு மருமகனாவாய் என்றான்.
22
பின்பு சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து: நீங்கள் தாவீதோடே இரகசியமாய்ப் பேசி: இதோ, ராஜா உன்மேல் பிரியமாயிருக்கிறார்; அவருடைய ஊழியக்காரர் எல்லாரும் உம்மைச் சிநேகிக்கிறார்கள்; இப்போதும் நீர் ராஜாவுக்கு மருமகனானால் நலம் என்று சொல்லுங்கள் என்று கற்பித்தான்.
23
சவுலின் ஊழியக்காரர் இந்த வார்த்தைகளைத் தாவீதின் செவிகள் கேட்கப் பேசினார்கள்; அப்பொழுது தாவீது, நான் ராஜாவுக்கு மருமகனாகிறது லேசான காரியமா? நான் எளியவனும், அற்பமாய் எண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன் என்றான்.
24
தாவீது இன்ன இன்னபடி சொன்னான் என்று சவுலின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவித்தார்கள்.
25
அப்பொழுது சவுல்: ராஜா பரிசத்தை விரும்பாமல், பெலிஸ்தரின் நூறு நுனித்தோல்களினால் ராஜாவின் சத்துருக்களிடத்தில் பழிவாங்க விருப்பமாயிருக்கிறார் என்று தாவீதுக்குச் சொல்லுங்கள் என்றான்; தாவீதை பெலிஸ்தரின் கையினால் விழப்பண்ணுவதே சவுலுடைய எண்ணமாயிருந்தது.
26
அவன் ஊழியக்காரர் தாவீதுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, ராஜாவுக்கு மருமகனாகிறது தாவீதுக்குப் பிரியமாயிருந்தது.
27
அதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறுமுன்னே, தாவீது எழுந்து, தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோய், பெலிஸ்தரில் இருநூறுபேரை வெட்டி, அவர்கள் நுனித்தோல்களைக் கொண்டு வந்து, தான் ராஜாவுக்கு மருமகனாகும்படிக்கு, அவைகளை ராஜாவுக்கு எண்ணிச் செலுத்தினான்; அப்பொழுது சவுல் தன் குமாரத்தியாகிய மீகாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.