15
யோசுவாவும் இஸ்ரவேலர் எல்லாரும் அவர்களுக்கு முன்னாக முறிந்து, வனாந்தரத்துக்குப் போகிற வழியே ஓடிப்போனார்கள்.
16
அப்பொழுது பட்டணத்துக்குள் இருந்த ஜனங்கள் எல்லாரும் அவர்களைத் துரத்தும்படி கூப்பிட்டுக்கொண்டு யோசுவாவைப் பின்தொடர்ந்து பட்டணத்தை விட்டு அப்புறப்பட்டார்கள்.
17
ஆயியிலும் பெத்தேலிலும் இஸ்ரவேலரைப் பின்தொடராத மனுஷன் இருந்ததில்லை; பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு, இஸ்ரவேலரைத் துரத்திக்கொண்டுபோனார்கள்.
18
அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: உன் கையில் இருக்கிற ஈட்டியை ஆயிக்கு நேராக நீட்டு; அதை உன்கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்; அப்படியே யோசுவா தன் கையில் இருந்த ஈட்டியைப் பட்டணத்துக்கு நேராக நீட்டினான்.
19
அவன் தன் கையை நீட்டினவுடனே, பதிவிருந்தவர்கள் தீவிரமாய்த் தாங்கள் இருந்த இடத்திலிருந்து எழும்பி ஓடி, பட்டணத்துக்கு வந்து, அதைப் பிடித்து, தீவிரத்தோடே பட்டணத்தைத் தீக்கொளுத்தினார்கள்.
20
ஆயியின் மனுஷர் பின்னிட்டுப் பார்த்தபோது, இதோ, பட்டணத்தின் புகை ஆகாசத்தில் எழும்புகிறதைக் கண்டார்கள்; அப்பொழுது அங்கும் இங்கும் ஓடிப்போகிறதற்கு அவர்களுக்கு இடம் இல்லாமற்போயிற்று; வனாந்தரத்துக்கு ஓடின ஜனங்கள் தங்களைத் தொடர்ந்தவர்கள் முகமாய்த் திரும்பினார்கள்.
21
பதிவிருந்தவர்கள் பட்டணத்தைப் பிடித்ததையும், பட்டணத்தின் புகை எழும்புகிறதையும், யோசுவாவும் இஸ்ரவேலரும் பார்த்தபோது, திரும்பிக்கொண்டு, ஆயியின் மனுஷரை முறிய அடித்தார்கள்.
22
பட்டணத்திலிருந்தவர்களும் அவர்களுக்கு எதிர்ப்பட்டதினால், சிலர் இப்புறத்திலும் சிலர் அப்புறத்திலும் இருந்த இஸ்ரவேலின் நடுவே அகப்பட்டுக்கொண்டார்கள்; ஆகையால் அவர்களில் ஒருவரும் தப்பி மீந்திராதபடிக்கு அவர்களை வெட்டிப்போட்டு,
23
ஆயியின் ராஜாவை உயிரோடே பிடித்து, யோசுவாவினிடத்தில் கொண்டுவந்தார்கள்.
24
இஸ்ரவேலர் வனாந்தரவெளியிலே தங்களைத் துரத்தின ஆயியின் குடிகளையெல்லாம் வெட்டித் தீர்ந்தபோதும், அவர்கள் அனைவரும் நாசமாகுமட்டும் பட்டயக்கருக்கினால் விழுந்து இறந்தபோதும், இஸ்ரவேலர் எல்லாரும் ஆயிக்குத் திரும்பி, அதைப் பட்டயக்கருக்கினால் சங்கரித்தார்கள்.
25
அந்நாளிலே ஆணும் பெண்ணுமாக ஆயியின் மனுஷர் எல்லாரும் பன்னீராயிரம்பேர் விழுந்தார்கள்.
26
ஆயியின் குடிகளையெல்லாம் சங்கரித்துத் தீருமட்டும், யோசுவா ஈட்டியை நீட்டிக்கொண்டிருந்த தன் கையை மடக்கவில்லை.
27
கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்ட வார்த்தையின்படி, மிருகஜீவனையும் அந்தப் பட்டணத்தின் கொள்ளையையும் மாத்திரம் இஸ்ரவேலர் எடுத்துக்கொண்டார்கள்.
28
யோசுவா ஆயியைச் சுட்டெரித்து, அதை இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி என்றைக்கும் பாழாய்க்கிடக்கும் மண்மேடாக்கி,
29
ஆயியின் ராஜாவை ஒரு மரத்திலே தூக்கிப்போடுவித்து, சாயங்காலமட்டும் அதிலே தொங்கவிட்டான்; சூரியன் அஸ்தமித்தபின்பு யோசுவா அவன் உடலை மரத்தைவிட்டு இறக்கச் சொன்னான்; அதைப் பட்டணவாசலில் போட்டு, இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலை அதின்மேல் குவித்தார்கள்.