எண்ணாகமம் 20:14-21 - BSI
14
பின்பு மோசே காதேசிலிருந்து ஏதோமின் ராஜாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:
15
எங்கள் பிதாக்கள் எகிப்துக்குப் போனதும், நாங்கள் எகிப்திலே நெடுநாள் வாசம்பண்ணினதும், எகிப்தியர் எங்களையும் எங்கள் பிதாக்களையும் உபத்திரவப்படுத்தினதும், இவைகளினால் எங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தமும் உமக்குத் தெரிந்திருக்கிறது.
16
கர்த்தரை நோக்கி நாங்கள் மன்றாடினோம்; அவர் எங்களுக்குச் செவிகொடுத்து, ஒரு தூதனை அனுப்பி, எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; இப்பொழுது நாங்கள் உமது எல்லைக்கு உட்பட்ட காதேஸ் ஊரில் வந்திருக்கிறோம்.
17
நாங்கள் உமது தேசத்தின் வழியாய்க் கடந்துபோகும்படி உத்தரவு கொடுக்கவேண்டும்; வயல்வெளிகள் வழியாகவும், திராட்சத்தோட்டங்கள் வழியாகவும் நாங்கள் போகாமலும், துரவுகளின் தண்ணீரைக் குடியாமலும், ராஜபாதையாகவே நடந்து, உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும், வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்போம் என்று, உமது சகோதரனாகிய இஸ்ரவேல் சொல்லி அனுப்புகிறான் என்று சொல்லச்சொன்னான்.
18
அதற்கு ஏதோம்: நீ என் தேசத்தின் வழியாய்க் கடந்துபோகக்கூடாது; போனால் பட்டயத்தோடே உன்னை எதிர்க்கப் புறப்படுவேன் என்று அவனுக்குச் சொல்லச்சொன்னான்.
19
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் அவனை நோக்கி: நடப்பான பாதையின் வழியாய்ப் போவோம்; நாங்களும் எங்கள் மிருகங்களும் உன் தண்ணீரைக் குடித்தால், அதற்குக் கிரயங்கொடுப்போம்; வேறொன்றும் செய்யாமல், கால்நடையாய் மாத்திரம் கடந்துபோவோம் என்றார்கள்.
20
அதற்கு அவன்: நீ கடந்துபோகக்கூடாது என்று சொல்லி, வெகு ஜனங்களோடும் பலத்த கையோடும் அவர்களை எதிர்க்கப் புறப்பட்டான்.
21
இப்படி ஏதோம் தன் எல்லைவழியாய்க் கடந்துபோகும்படி இஸ்ரவேலருக்கு உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலர் அவனை விட்டு விலகிப் போனார்கள்.