2நாளாகமம் 31:11-18 - BSI
11
அப்பொழுது எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்தில் பண்டகசாலைகளை ஆயத்தப்படுத்தச் சொன்னான்.
12
அவர்கள் அவைகளை ஆயத்தப்படுத்தினபின்பு, அவைகளிலே காணிக்கைகளையும், தசம பாகத்தையும், பரிசுத்தம்பண்ணப்பட்டவைகளையும் உண்மையாய் எடுத்துவைத்தார்கள்; அவைகளின்மேல் லேவியனாகிய கொனனியா தலைவனும், அவன் தம்பியாகிய சிமேயி இரண்டாவதுமாயிருந்தான்.
13
ராஜாவாகிய எசேக்கியாவும், தேவனுடைய ஆலய விசாரணைக்காரனாகிய அசரியாவும் பண்ணின கட்டளையின்படியே, யெகியேலும், அசசியாவும், நாகாத்தும், ஆசகேலும், யெரிமோத்தும், யோசபாத்தும், ஏலியேலும், இஸ்மகியாவும், மாகாத்தும், பெனாயாவும், கொனனியாவின் கீழும் அவன் தம்பியாகிய சிமேயியின் கீழும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
14
கிழக்குவாசலைக் காக்கிற இம்னாவின் குமாரனாகிய கோரே என்னும் லேவியன், கர்த்தருக்குச் செலுத்தப்பட்ட காணிக்கைகளையும் மகா பரிசுத்தமானவைகளையும் பங்கிடும்படிக்கு, தேவனுக்குச் செலுத்தும் உற்சாகக் காணிக்கைகள்மேல் அதிகாரியாயிருந்தான்.
15
அவனுடைய கைக்கு உதவியாக ஆசாரியரின் பட்டணங்களில் வகுப்புகளின்படியிருக்கிற தங்கள் சகோதரரிலே பெரியவனுக்கும் சிறியவனுக்கும் சரிசமானமாய்க் கொடுக்கும்படிக்கு, உண்மையுள்ளவர்களாக எண்ணப்பட்ட ஏதேனும், மின்யமீனும், யெசுவாவும், செமாயாவும், அமரியாவும், செக்கனியாவும் ஏற்படுத்தப்பட்டார்கள்.
16
வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட மூன்று வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளைத்தவிர, கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற அவரவருக்கும் தங்கள் வகுப்புகளின்படியே, தங்கள் முறைகளிலே தாங்கள் செய்கிற தங்கள் பணிவிடைக்குத்தக்கதாய் அநுதின படி கொடுக்கப்பட்டது.
17
தங்கள் பிதாக்களின் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட தங்கள் வகுப்புகளின்படியே தங்கள் முறைகளிலிருக்கிற இருபது வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆசாரியருக்கும், லேவியருக்கும்,
18
அவர்களுடைய எல்லாக் கூட்டத்தின் அட்டவணையிலும் எழுதப்பட்ட அவர்களுடைய எல்லாக் குழந்தைகளுக்கும், மனைவிகளுக்கும், குமாரருக்கும், குமாரத்திகளுக்கும் பங்கு கொடுத்தார்கள்; அவர்கள் பரிசுத்தமானதை உண்மையின்படி பரிசுத்தமாய் விசாரித்தார்கள்.