ஆதியாகமம் 48:13-20 - BSI
13
பின்பு, யோசேப்பு அவ்விருவரையும் கொண்டுவந்து, எப்பிராயீமைத் தன் வலது கையினாலே இஸ்ரவேலின் இடது கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடது கையினாலே இஸ்ரவேலின் வலது கைக்கு நேராகவும் விட்டான்.
14
அப்பொழுது இஸ்ரவேல், மனமறிய, தன் வலது கையை நீட்டி, இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின்மேலும், மனாசே மூத்தவனாயிருந்தும், தன் இடது கையை மனாசேயுடைய தலையின்மேலும் வைத்தான்.
15
அவன் யோசேப்பை ஆசீர்வதித்து: என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவனும், நான் பிறந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவனும்,
16
எல்லாத் தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்ட தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக, என் பேரும் என் பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு என்பவர்களின் பேரும் இவர்களுக்கு இடப்படக்கடவது; பூமியில் இவர்கள் மிகுதியாய்ப் பெருகக்கடவர்கள் என்றான்.
17
தகப்பன் தன் வலதுகையை எப்பிராயீமுடைய தலையின்மேல் வைத்ததை யோசேப்பு கண்டு, அது தனக்குப் பிரியமில்லாதபடியால், எப்பிராயீமுடைய தலையின்மேல் இருந்த தன் தகப்பனுடைய கையை மனாசேயினுடைய தலையின்மேல் வைக்கும்படிக்கு எடுத்து:
18
என் தகப்பனே, அப்படியல்ல, இவன் மூத்தவன், இவனுடைய தலையின் மேல் உம்முடைய வலதுகையை வைக்கவேண்டும் என்றான்.
19
அவன் தகப்பனோ தடுத்து: அது எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும்; இவனும் ஒரு ஜனக்கூட்டமாவான், இவனும் பெருகுவான்; இவனுடைய தம்பியோ இவனிலும் அதிகமாய்ப் பெருகுவான்; அவனுடைய சந்ததியார் திரளான ஜனங்களாவார்கள் என்றான்.
20
இவ்விதமாக அவன் அன்றைத்தினம் அவர்களை ஆசீர்வதித்து: தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள் என்று சொல்லி, எப்பிராயீமை மனாசேக்கு முன்னே வைத்தான்.