WCV

ஏசாயா அத்தியாயம் 34
வேற்றினத்தாரே, நெருங்கி வந்து செவிகொடுங்கள்: மக்களினங்களே, கவனித்துக் கேளுங்கள்: மண்ணுலகும் அதில் வாழ்வன யாவும் கேட்கட்டும்: வையகமும் அதில் தோன்றுவன யாவும் செவிகொடுக்கட்டும்.
வேற்றினத்தார் அனைவர் மேலும் ஆண்டவர் சீற்றம் அடைந்துள்ளார்: அவர்களின் படைத்திரள் முழுவதற்கும் எதிராக வெஞ்சினம் கொண்டுள்ளார்: அவர்களை அவர் அடியோடு அழிப்பார்: அவர்களைப் படுகொலைக்கு உள்ளாக்குவார்.
அவர்களில் வாளுக்கு இரையானோர் தூக்கியெறிப்படுவர்: அவர்களின் பிணங்கள் துர்நாற்றமடிக்கும்: அவர்களின் இரத்தம் மலைகளில் வழிந்தோடும்.
விண்ணுலகின் படைத்திரள் அனைத்தும் உருகிப்போகும்: வானின் வெளி ஏட்டுச் சுருளெனச் சுருட்டப்படும்: திராட்சை இலை உதிர்வதுபோலும் அத்தி இலை வீழ்வதுபோலும், வான் படைகள் அனைத்தும் உதிர்ந்து விடும்.
ஆண்டவரது வாள் வானில் வெளியேறக் குடித்துள்ளது: இதோ, ஏதோமின் மேலும் அழிவுக்கென ஒதுக்கப்பட்ட மக்களினத்தின் மேலும் தண்டனைத் தீர்ப்புக்காக அது இறங்கப்போகிறது.
அவரது வாளில் செம்மறிக்குட்டி, வெள்ளாடு ஆகியவற்றின் இரத்தக் கறை படிந்துள்ளது: அதில் கிடாய்களின் சிறுநீரகக் கொழுப்பு படிந்துள்ளது: ஏனெனில், பொட்சராவில் ஆண்டவருக்குப் பலி கொடுக்கப்படும்: ஏதோம் நாட்டில் படுகொலை நடக்கும்.
அவர்களின் காட்டெருதுகள் செத்துவிழும்: எருதுகளுடன் காளைகளும் மடியும்: அவர்களின் நாடு இரத்தத்தை வெறியேறக் குடிக்கும்: தரைப்புழுதி கொழுப்பால் மூடப்படும்.
ஆண்டவர் பழிதீர்க்கும் நாள் அது: சீயோன் வழக்கில் நல்தீர்ப்பீன் ஆண்டு அது.
ஏதோமின் நீரோடைகள் கீலாகும்: அதன் தரைப்புழுதி கந்தகமாகும்: அதன் நிலம் கொழுந்து விட்டெரியும் கீலாகும்.
இரவும் பகலும் அது அணையாமல் எரியும்: அதன் புகை என்றென்றும் எழும்பிக் கொண்டிருக்கும்: தலைமுறை தோறும் நாடு பாழடைந்து கிடக்கும்: எவருமே அதன் வழியாய் ஒருபோதும் பயணம் செய்யார்.
கூகையும் சாக்குருவியும் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளும்: ஆந்தையும் கருங்காகமும் அங்கே தங்கியிருக்கும்: ஆண்டவர் நூல்பிடித்து அதை உருக்குலையச் செய்வார்: அவர் தூக்குநூல் பிடித்து அதைப் பாழடையச் செய்வார்.
உயர்குடி மக்கள் அங்கே இல்லை: அரசன் என அழைக்க அங்கே யாரும் இல்லை: அதன் தலைவர் அனைவரும் ஒன்றுமில்லாது ஒழிவர்.
அதன் கோட்டைகள்மேல் முட்புதர்களும் அதன் அரண்கள்மேல் காஞ்சொறிப் பூண்டுகளும் நெருஞ்சிகளும் ஓங்கி வளரும்: அது குள்ள நரிகளின் குடியிருப்பாக மாறும்: ஆந்தைகளின் வாழ்விடம் ஆகும்.
காட்டு விலங்குகள் கழுதைப் புலிகளுடன் சேர்ந்து திரியும்: காட்டாடுகள் ஒன்றையொன்று கத்தி அழைக்கும்: கூளி அங்கே தங்கித் தான் இளைப்பாறுவதற்கென இடத்தைக் கண்டுபிடிக்கும்.
ஆந்தை அங்கே கூடுகட்டி முட்டை இட்டுக் குஞ்சுகள் பொரித்து, தன் நிழலில் அவற்றைச் சேர்த்து வளர்க்கும்: பருந்துகளும் சோடி சோடியாய்ச் சேர்ந்துவரும்.
ஆண்டவரின் ஏட்டுச் சுருளை ஆய்ந்து படியுங்கள்: “எதுவுமே தனித்துவிடப்படுவதில்லை, துணையின்றி எதுவும் இருப்பதில்லை” ஏனெனில், ஆண்டவரின் வாய் மொழிந்த கட்டளை இது. அவரது ஆவிதான் இவற்றை ஒருங்கிணைத்தது.
அவரே அவர்களுக்கென்று சீட்டுப் போட்டார்: அவர்தம் கை, நூல் பிடித்து நாட்டை அவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தது: அவர்கள் அதை என்றுமுள உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்: தலைமுறைதோறும் அதில் தங்கி வாழ்வர்.