WCV

நீதிமொழிகள் அத்தியாயம் 4
பிள்ளைகளே! தந்தையின் போதனைக்குச் செவிசாயுங்கள்: மெய்யுணர்வை அடையும்படி அதில் கவனம் செலுத்துங்கள்.
நான் உங்களுக்கு நற்போதனை அளிக்கின்றேன்: நான் கற்பிப்பதைப் புறக்கணியாதீர்கள்:
நான் என் தந்தையின் அருமை மைந்தனாய், தாய்க்குச் செல்லப் பிள்ளையாய் வளர்ந்து வந்தேன்.
அப்பொழுது என் தந்தை எனக்குக் கற்பித்தது இதுவே: “நான் சொல்வதை உன் நினைவில் வை: என் கட்டளைகளை மறவாதே: நீ வாழ்வடைவாய்.
ஞானத்தையும் மெய்யுணர்வையும் தேடிப் பெறு: நான் சொல்வதை மறந்துவிடாதே: அதற்கு மாறாக நடவாதே:
ஞானத்தை புறக்கணியாதே: அது உன்னைப் பாதுகாக்கும்: அதை அடைவதில் நாட்டங்கொள்: அது உன்னைக் காவல் செய்யும்.
ஞானத்தைத் தேடிப் பெறுவதே ஞானமுள்ள செயல்: உன் சொத்து எல்லாம் கொடுத்தாயினும் மெய்யுணர்வைத் தேடிப் பெறு.
அதை உயர்வாய்க் கொள்: அது உன்னை உயர்த்தும்: அதை நீ தழுவிக்கொள்: அது உன்னை மாண்புறச் செய்யும்.
அது உன் தலையில் மலர் முடியைச் சூட்டும்: மணிமுடி ஒன்றை உனக்கு அளிக்கும்.”
பிள்ளாய்! கவனி: நான் சொல்வதை ஏற்றுக்கொள்: அப்பொழுது உன் ஆயுட்காலம் நீடிக்கும்.
ஞானத்தின் வழிகளை உனக்குக் கற்பித்திருக்கின்றேன்: நேரிய பாதைகளில் உன்னை நடத்தி வந்தேன்.
நீ நடக்கும்போது உன் கால் சறுக்காது : நீ ஓடினாலும் இடறி விழமாட்டாய்.
பெற்ற நற்பயிற்சியில் உறுதியாக நிலைத்துநில்: அதை விட்டுவிடாதே: அதைக் கவனமாய்க் காத்துக்கொள்: அதுவே உனக்கு உயிர்.
பொல்லார் செல்லும் பாதையில் செல்லாதே: தீயோர் நடக்கும் வழியில் நடவாதே.
அதன் அருகில் செல்லாதே: அதில் கால்வைக்காதே: அதை விட்டு விலகி உன் வழியே செல்.
தீமை செய்தாலன்றி அவர்களுக்குத் தூக்கம் வராது: யாரையாவது கீழே வீழ்த்தினாலன்றி அவர்களுக்கு உறக்கம் வராது
தீவினையே அவர்கள் உண்ணும் உணவு: கொடுஞ் செயலே அவர்கள் பருகும் பானம்.
நேர்மையாளரின் பாதை வைகறை ஒளி போன்றது: அது மேன்மேலும் பெருகி நண்பகலாகின்றது.
பொல்லாரின் பாதையோ காரிருள் போன்றது: தாங்கள் எதில் இடறி விழுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது
பிள்ளாய்! என் வார்த்தைகளுக்குச் செவிகொடு: நான் சொல்வதைக் கவனி.
என் கவனத்தினின்று அவை விலகாதிருக்கட்டும்: உன் உள்ளத்தில் அவற்றைப் பதித்துவை.
அவற்றைத் தேடிப் பெறுவோருக்கு அவை உயிரளிக்கும்: அவர்களுக்கு உடல் நலமும் தரும்.
விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய்: ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்.
நாணயமற்ற பேச்சு உன் வாயில் வரக்கூடாது: வஞ்சகச் சொல் உன் வாயில் எழக்கூடாது.
உன் கண்கள் நேரே பார்க்கட்டும்: எதிரே இருப்பதில் உன் பார்வையைச் செலுத்து.
நேர்மையான பாதையில் நட: அப்பொழுது, உன் போக்கு இடரற்றதாயிருக்கும்.
வலப்புறமோ இடப்புறமோ திரும்பாதே: தீமையின் பக்கமே காலெடுத்து வைக்காதே.