WCV

நீதிமொழிகள் அத்தியாயம் 23
ஆளுநர் வீட்டில் நீ உணவு கொள்ள உட்காரும்போது, உனக்குமுன் இருப்பதை நன்றாய்க் கவனித்துப் பார்.
உனக்கு அப்போது அடங்காப் பசி இருந்தாலும், உன் தொண்டையில் கத்தி இருப்பதாக நினைத்துக்கொள்.
அவர் தரும் சுவையான உண்டியை உண்ண ஆவல் கொள்ளாதே: அது உன்னை வஞ்சிக்க விழையும் உணவாயிருக்கலாம்.
செல்வராக வேண்டுமென்று பாடுபட்டு உருக்குலைந்து போகாதே: அதனால் உனது அறிவை இழந்து விடாதே.
இல்லாமற்போகும் பொருள் மேல் நீ கண்ணும் கருத்துமாய் இருப்பானேன்? கழுகுபோல அது தனக்குச் சிறகுகளை வளர்த்துக்கொண்டு வானத்தில் பறந்து போகுமன்றோ?
கஞ்சர் தரும் உணவை உண்ணாதே: அவரது அறுசுவை உண்டியை உண்ண ஆவல் கொள்ளாதே.
அவர் தமக்குள் கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பார்: “உண்டு பருகு” என்று அவர் சொன்னாலும், அவருக்கு உன்மீது அக்கறை இல்லாதிருக்கலாம்.
நீ உண்ட உணவை வாந்தியெடுக்க நேரிடும்: நீ உரைத்த புகழுரை பயனற்றதாகும்.
மதிகேடர் காதில் விழும்படி எதையும் பேசாதே: உன் அறிவுரைகளை அவர் மதிக்கமாட்டார்.
வழிவழிச் சொத்தின் எல்லையை மாற்றி அமைக்காதே: உன் நிலத்தின் எல்லையைத் தள்ளித் தள்ளி, திக்கற்றவர்களின் நிலத்தை எடுத்துக்கொள்ள முயலாதே.
ஏனெனில் அவர்களின் மீட்பர் வல்லவர். அவர் அவர்கள் சார்பில் உனக்கு எதிராக வழக்காடுவார்.
நல்லுரை கேட்பதில் சிந்தனையைச் செலுத்து: அறிவூட்டும் மொழிகளுக்குச் செவிகொடு.
பிள்ளைகளைத் தண்டித்துத் திருத்தத் தயங்காதே: பிரம்பினால் அடித்தால் சாகமாட்டார்கள்.
நீ பிரம்பினால் அவர்களை அடித்தால், அவர்களைப் பாதாளத்துக்குத் தப்புவிக்கிறவனாவாய்.
பிள்ளாய், நீ ஞானமுள்ளவனாயிருந்தால், நான் மனமகிழ்ச்சி அடைவேன்.
உன் நாவு நேர்மையானவற்றைப் பேசினால், என் உள்ளம் களிகூரும்.
வளமுடன் இருக்கும் பாவிகளைப்போல நீயும் இருக்கவேண்டுமென்று ஏங்காதே: ஆண்டவரிடம் எப்போதும் அச்சம் உள்ளவனாயிரு.
அப்பொழுது உன் வருங்காலம் வளமானதாயிருக்கும்: உன் நம்பிக்கையும் வீண்போகாது.
பிள்ளாய், இதைக் கவனி: ஞானமுள்ளவனாயிரு: உன் மனத்தை நன்னெறியில் செலுத்து.
குடிகாரரோடு சேராதே: பெருந்தீனியரோடு சேர்ந்து கொண்டு அவர்களைப் போலப் புலால் உண்ணாதே.
குடிகாரரும் பெருந்தீனியரும் முடிவில் ஏழைகளாவர்: உண்டு குடித்த மயக்கம் கந்தையை உடுத்தும்.
பெற்ற தந்தைக்குச் செவிகொடு: உன் தாய் முதுமை அடையும்போது அவளை இழிவாக எண்ணாதே.
மெய்ம்மையை விலைகொடுத்தாயினும் வாங்கு: ஆனால் அதை விற்பனை செய்யாதே: அவ்வாறே ஞானத்தையும் நல்லுரையையும் உணர்வையும் விலை கொடுத்துப்பெறு.
நேர்மையான பிள்ளையின் தந்தை மிகவும் களிகூர்வார்: ஞானமுள்ள பிள்ளையைப் பெற்ற தகப்பன் அவர் பொருட்டு மகிழ்ச்சி அடைவார்.
நீ உன் தந்தையையும் உன் தாயையும் மகிழ்விப்பாயாக: உன்னைப் பெற்றவளைக் களிகூரச் செய்வாயாக.
மகனே, நான் சொல்வதைக் கவனி: என் வழிகளில் உன் கவனத்தைச் செலுத்து.
விலைமகள் ஒரு படுகுழி: பரத்தை ஓர் ஆழ்கிணறு.
அவள் கள்வனைப்போலப் பதுங்கி இருப்பாள்: அவள் ஏராளமான பேரை வஞ்வசிப்பவள்.
துன்பக் கதறல், துயரக் கண்ணீர், ஓயாத சண்டை, ஒழியாத புலம்பல், காரணம் தெரியாமல் கிடைத்த புண்கள், கலங்கிச் சிவந்திருக்கும் கண்கள்-இவை அனைத்தையும் அனுபவிப்பவர் யார்?
திராட்சை இரச மதுவில் நீந்திக் கொண்டிருப்பவர்களே, புதுப்புது மதுக் கலவையைச் சுவைத்துக் களிப்பவர்களே,
மதுவைப் பார்த்து, “இந்த இரசத்தின் சிவப்பென்ன! பாத்திரத்தில் அதன் பளபளப்பென்ன!” எனச் சொல்லி மகிழாதீர். அது தொண்டைக்குள் செல்லும்போது இனிமையாயிருக்கும்:
பிறகோ அது பாம்புபோலக் கடிக்கும்: விரியனைப் போலத் தீண்டும்.
உன் கண் என்னென்னவோ வகையான காட்சிகளைக் காணும்: உன் உள்ளத்திலிருந்து ஏறுமாறான சொற்கள் வெளிப்படும்.
கடல் அலைமீது மிதந்து செல்வது போலவும், பாய்மர நுனியில் படுத்துறங்குவது போலவும் உனக்குத் தோன்றும்.
“என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை: என்னை அறைந்தார்கள், நான் அதை உணரவில்லை: நான் எப்போது விழித்தெழுவேன்? அதை இன்னும் கொடுக்கும்படி கேட்பேன்” என்று நீ சொல்வாய்.