WCV

யோபு அத்தியாயம் 29
யோபு இன்னும் தொடர்ந்து பேசிய உரை:
காண்பேனா முன்னைய திங்கள்களை: கடவுள் என்னைக் கண்காணித்த நாள்களை!
அப்போது அவர் விளக்கு என் தலைமீது ஒளிவீசிற்று: அவரது ஒளியால் இருளில் நான் நடந்தேன்.
அப்போது என் இளமையின் நாள்களில் நான் இருந்தேன்: கடவுளின் கருணை என் குடிசை மீது இருந்தது.
அன்று வல்லவர் என்னோடு இருந்தார்: என் மக்கள் என்னைச் சூழ்ந்திருந்தனர்.
அப்போது என் காலடிகள் நெய்யில் குளித்தன: பாறையிலிருந்து எனக்கு எண்ணெய் ஆறாயப் பாய்ந்தது.
நகர வாயிலுக்கு நான் செல்கையிலும், பொது மன்றத்தில் என் இருக்கையில் அமர்கையிலும்,
என்னைக் கண்டதும் இளைஞர் ஒதுங்கிக்கொள்வர்: முதிர்ந்த வயதினர் எழுந்து நிற்பர்.
உயர்குடி மக்கள் தம் பேச்சை நிறுத்துவர்: கைகட்டி, வாய்பொத்தி வாளாவிருப்பர்.
தலைவர்தம் குரல் அடங்கிப்போம்: அவர் நா அண்ணத்தோடு ஒட்டிக்கொள்ளும்.
என்னைக் கேட்ட செவி, என்னை வாழ்த்தியது: என்னைப் பார்த்த கண் எனக்குச் சான்று பகர்ந்தது.
ஏனெனில், கதறிய ஏழைகளை நான் காப்பாற்றினேன்: தந்தை இல்லார்க்கு உதவினேன்.
அழிய இருந்தோர் எனக்கு ஆசி வழங்கினர்: கைம்பெண்டிர்தம் உள்ளத்தைக் களிப்பால் பாடச் செய்தேன்.
அறத்தை அணிந்தேன்: அது என் ஆடையாயிற்று. நீதி எனக்கு மேலாடையும் பாகையும் ஆயிற்று.
பார்வையற்றோர்க்குக் கண் ஆனேன்: காலூனமுற்றோர்க்குக் கால் ஆனேன்.
ஏழைகளுக்கு நான் தந்தையாக இருந்தேன்: அறிமுகமற்றோரின் வழக்குகளுக்காக வாதிட்டேன்.
கொடியவரின் பற்களை உடைத்தேன்: அவரின் பற்களுக்கு இரையானவரை விடுவித்தேன்.
நான் எண்ணினேன்: 'மணல் மணியைப்போல் நிறைந்த நாள் உடையவனாய் என் இல்லத்தில் சாவேன்.
என் வேர் நீர்வரை ஓடிப் பரவும்: இரவெல்லாம் என் கிளையில் பனி இறங்கும்.
என் புகழ் என்றும் ஓங்கும்: என் வில் வளைதிறன் கொண்டது. '
எனக்குச் செவிகொடுக்க மக்கள் காத்திருந்தனர்: என் அறிவுரைக்காக அமைதி காத்தனர்.
என் சொல்லுக்கு மறுசொல் அவர்கள் கூறவில்லை: என் மொழிகள் அவர்களில் தங்கின.
மழைக்கென அவர்கள் எனக்காய்க் காத்திருந்தனர்: மாரிக்கெனத் தங்கள் வாயைத் திறந்தனர்.
நம்பிக்கை இழந்தோரை என் புன்முறவல் தேற்றியது: என் முகப்பொலிவு உரமூட்டியது.
நானே அவர்களுக்கு வழியைக் காட்டினேன்: தலைவனாய்த் திகழ்ந்தேன்: வீரர் நடுவே வேந்தனைப்போல் வாழ்ந்தேன்: அழுகின்றவர்க்கு ஆறுதல் அளிப்பவன் போல் இருந்தேன்.