Bible Reading Plan - Old/New Testament Plan (365 days) - BSI

ஆதியாகமம் 8-10
தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.
ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்றுபோயிற்று.
ஜலம் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; நூற்றைம்பது நாளுக்குப்பின்பு ஜலம் வடிந்தது.
ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று.
பத்தாம் மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.
நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,
ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது.
பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான்.
பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப்பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான்.
பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான்.
அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்துபோயிற்று என்று அறிந்தான்.
பின்னும் ஏழு நாள் பொறுத்து, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்பி வரவில்லை.
அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல்தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது.
இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது.
அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி:
நீயும், உன்னோடேகூட உன் மனைவியும், உன் குமாரரும், உன் குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப் புறப்படுங்கள்.
உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார்.
அப்பொழுது நோவாவும், அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் புறப்பட்டு வந்தார்கள்.
பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல பிராணிகளும், சகல பறவைகளும் ஜாதிஜாதியாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன.
அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.
சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கி பொல்லாததாயிருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.
பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.
பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.
உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன.
நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்தது போல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.
மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.
உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்.
மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.
நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விர்த்தியாகுங்கள் என்றார்.
பின்னும் தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் நோக்கி:
நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும்,
உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள்முதல் இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள்பரியந்தம், பறவைகளோடும், நாட்டு மிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள சகல காட்டு மிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்.
இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்.
அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக:
நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில் தோன்றும்.
அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன்.
அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப்பார்ப்பேன்.
இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான யாவுக்கும், நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று நோவாவோடே சொன்னார்.
பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர், சேம், காம், யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன்.
இம்மூவரும் நோவாவின் குமாரர்; இவர்களாலே பூமியெங்கும் ஜனங்கள் பரம்பினார்கள்.
நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான்.
அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான்.
அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைத் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான்.
அப்பொழுது சேமும், யாப்பேத்தும் ஒரு வஸ்திரத்தை எடுத்துத் தங்கள் இருவருடைய தோள்மேலும் போட்டுக்கொண்டு, பின்னிட்டு வந்து, தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை மூடினார்கள்; அவர்கள் எதிர்முகமாய்ப் போகாதபடியினால், தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தைக் காணவில்லை.
நோவா திராட்சரசத்தின் வெறி தெளிந்து விழித்தபோது, தன் இளையகுமாரன் தனக்குச் செய்ததை அறிந்து:
கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான்.
சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான்.
யாப்பேத்தை தேவன் விர்த்தியாக்குவார்; அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றான்.
ஜலப்பிரளயத்துக்குப்பின்பு நோவா முந்நூற்று ஐம்பது வருஷம் உயிரோடிருந்தான்.
நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது வருஷம்; அவன் மரித்தான்.
நோவாவின் குமாரராகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களின் வம்சவரலாறு: ஜலப்பிரளயத்துக்குப்பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள்.
யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
இவர்களால் ஜாதிகளுடைய தீவுகள், அவனவன் பாஷையின்படியேயும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், ஜாதியின்படியேயும், வேறுவேறு தேசங்களாய்ப் பகுக்கப்பட்டன.
காமுடைய குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.
கூஷூடைய குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள். ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.
கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்; ஆகையால், கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல என்னும் வழக்கச்சொல் உண்டாயிற்று.
சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதி ஸ்தானங்கள்.
அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும்,
நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம்.
மிஸ்ராயீம், லூதீமையும், அனாமீமையும், லெகாபீமையும், நப்தூகீமையும்,
பத்ருசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகீமையும், கப்தொரீமையும் பெற்றான்.
கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,
ஈவியரையும், அர்கீரியரையும், சீநியரையும்,
அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்; பின்பு கானானியரின் வம்சத்தார் எங்கும் பரவினார்கள்.
கானானியரின் எல்லை, சீதோன் முதல் கேரார் வழியாய்க் காசாமட்டுக்கும், அது முதல் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் வழியாய் லாசாமட்டுக்கும் இருந்தது.
இவர்கள் தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும் காமுடைய சந்ததியார்.
சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியார் எல்லாருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாய் இருந்தான்.
சேமுடைய குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள்.
ஆராமுடைய குமாரர், ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ் என்பவர்கள்.
அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.
ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவனுக்குப் பேலேகு என்று பேர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பேர் யொக்தான்.
யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும்,
அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,
ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
ஒப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் அனைவரும் யொக்தானுடைய குமாரர்.
இவர்களுடைய குடியிருப்பு மேசா துவக்கி, கிழக்கேயுள்ள மலையாகிய செப்பாருக்குப் போகிற வழிமட்டும் இருந்தது.
இவர்களே தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும் சேமுடைய சந்ததியார்.
தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப்பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன.

மத்தேயு 6
மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.
ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது.
அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.
அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில்பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.
அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.
அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
நீங்கள் ஜெபம்பண்ணவேண்டியவிதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.
உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.
நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
நீயோ உபவாசிக்கும்போது, இந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.
அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.
பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.
பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.
உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.
கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.
உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!
இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.
ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?
ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?
கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?
உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை;
என்றாலும், சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.
அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள்.
இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.
ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.