வேதாகமத்தை வாசி

1சாமுவேல் 13

                   
புத்தகங்களைக் காட்டு
1சவுல் அரசராகி ஓராண்டு ஆனபின், இஸ்ரயேல் மீது இரண்டாம் ஆண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தார்.
2அப்பொழுது சவுல் தமக்காக இஸ்ரயேலிருந்து மூவாயிரம் பேரைத் தேர்ந்து கொண்டார். மிக்மாசிலும் பெத்தேல் மலையிலும் சவுலுடன் இரண்டாயிரம் பேர் இருந்தனர். பென்யமினைச் சார்ந்த கிபயாவில் யோனாத்துடன் ஆயிரம் பேர் இருந்தனர். எஞ்சிய மக்களை அவர் அவரவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.
3யோனத்தான் கெபாவில் எல்லைக் காவலில் இருந்த பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தினர். பெலிஸ்திய மக்கள் அதைக் கேள்வியுற்றனர். “எபிரேயரும் இதைக் கேட்கட்டும் “ என்று நாடெங்கும் சவுல் எக்காளம் ஊதுவித்தார்.
4சவுல் பெலிஸ்தியரின் எல்லைக் காவலரை வெட்டி வீழ்த்தியதையும் அதனால் பெலிஸ்தியருக்கு இஸ்ரயேல்மீது கடும்பகை ஏற்பட்டதையும் அறிந்து இஸ்ரயேலர் அனைவரும் சவுலோடு சேர்ந்து கொண்டு கில்காலுக்குச் சென்றனர்.
5பெலிஸ்தியர் இஸ்ரயேலோடு போரிட முப்பதாயிரம் தேர்களோடும் ஆறாயிரம் குதிரை வீரர்களோடும் கடற்கரை மணலளவு வீரர்களோடும் திரண்டு வந்து பெத்தேலுக்குக் கிழக்கே மிக்மாசில் பாளையம் இறங்கினார்கள்.
6இஸ்ரயேலர் தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியினால் இன்னலுற்று குகைகளிலும், புதர்களிலும், பாறைகளிலும், கல்லறைகளிலும், பள்ளங்களிலும் ஒளிந்து கொண்டனர்.
7எபிரேயர் சிலர் யோர்தனைக் கடந்து காத்து, ஓகிலயாது நாடுகளுக்குச் சென்றனர். சவுல் இன்னும் கில்காலில் இருந்தார். மக்கள் அனைவரும் நடுங்கிக் கொண்டே அவரைப் பின்சென்றனர்.
8அவர் சாமுவேல் குறிப்பிட்ட படி ஏழு நாள் காத்திருந்தார். ஆனால் சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை. ஆகவே மக்கள் அவரைவிட்டுச் சிதறத் தொடங்கினர்.
9அப்போது சவுல் “எரிபலியையும் நல்லுறவுப் பலியையும் என்னிடம் கொண்டு வாருங்கள் “ என்று சொல்லி எரிபலி செலுத்தினார்.
10அவர் எரிபலி செலுத்தி முடிந்த வேளை சாமுவேல் அங்கு வந்தார். சவுல் அவரை சந்திக்கச் சென்று வரவேற்றார்.
11சாமுவேல், “நீர் என்ன செய்தீர்? என்று கேட்க அதற்கு சவுல் கூறியது: “மக்கள் என்னிடமிருந்து சிதறிப் போவதைக் கண்டேன். நீரும் குறித்த காலத்தில் வரவில்லை. பெலிஸ்தியரும் மிக்ஸ்பாவில் ஒன்று திரண்டு கொண்டிருந்தார்கள்.
12அப்”பொழுது “பெலிஸ்தியர் எனக்கு எதிராகக் கில்காலுக்கு இறங்கி வருவர்: நானோ இன்னும் ஆண்டவரின் தயவை நாடவில்லை “ என்று உணர்ந்ததால், நான் எரிபலி செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானேன். “
13சாமுவேல் சவுலை நோக்கி, “நீர் அறிவீனமாய்ச் செயல்பட்டீர். உம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படி நீர் நடக்கவில்லை. இல்லையேல் ஆண்டவர் இஸ்ரயேல் மீது உமது அரசை என்றென்றும் நிறுவியிருந்திருப்பார்.
14ஆனால் உமது அரசு நிலைக்காது. ஆண்டவர் தம் மனதிற்கு ஏற்ப ஒருவரைத் தமக்கெனத்தேடி அவரையே தம் மக்களின் தலைவராய் நியமித்துள்ளார். ஏனெனில் ஆண்டவர் கட்டளையின் படி நீர் நடக்கவில்லை என்றார்.
15சாமுவேல் எழுந்து கில்காலிலிருந்து பென்யமினைச் சார்ந்த கிபயாவுக்கு சென்றார். சவுல் தம்மோடு இருந்த வீரர்களைக் கணக்கெடுத்தார். அவர்கள் ஏறத்தாழ அறுநூறு பேர்.
16சவுலும் அவர் மகன் யோனத்தானும், அவரோடு இருந்த வீரர்கள் பென்யமினைச் சார்ந்த கொபாவில் தங்கினர். பெலிஸ்தியரோ மிக்மாசில் பாளையம் இறங்கியிருந்தார்கள்.
17பெலிஸ்தியரின் பாளையத்திலிருந்து மூன்று படைகளாகக் கொள்ளைக்காரர் புறப்பட்டு வந்தனர். ஒரு படையினர் ஒபிரா வழியாகச் சூவால் நாட்டிற்குப் பிரிந்து சென்றனர்.
18இன்னொரு படையினர் பெத்கோரோன் வழியாகச் சென்றனர். வேறொரு படையினர் பாலைநில கெபோயிமின் பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லை வழியில் சென்றனர்.
19“எபிரேயர் தங்களுக்காக வாள்களையும் ஈட்டிகளையும் செய்து கொள்ளக் கூடாது என்று பெலிஸ்தியர் திட்டமிட்டுயிருந்தால், இஸ்ரயேல் நாடெங்கும் கொல்லன் எவனும் காணப்படவில்லை.
20இஸ்ரயேலர் அனைவரும் தங்கள் கலப்பைக் கொழுக்களையும் மண்வெட்டிகளையும், கடப்பாரைகளையும், கோடாரிகளையும், அரிவாள்களையும் தீட்டுவதற்காகப் பெலிஸ்தியரிடமே சென்றனர்.
21தீட்டுவதற்கான கூலி கலப்பைக் கொழு மண்வெட்டி, முக்கூர்க்கருவி, கோடாரி தாற்றுக்கோல் ஆகிய ஒவ்வொன்றும் எட்டுகிராம் அளவுள்ள நாணயம் ஆகும்.
22ஆகவே போரிடும் நாள் வந்த போது சவுலோடும் யோனத்தானோடும் இருந்த வீரர் கையில் வாளோ ஈட்டியோ கிடையாது. சவுலும் யோனத்தானும் மட்டும் அவற்றை வைத்திருந்தார்கள்.
23பெலிஸ்தியரின் எல்லைக் காவல் மிக்மாசு கணவாய் வரை நீடித்திருந்தது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.