1 | இஸ்ரயேல் மக்களைச் சோதிக்கும்படி இந்த வேற்றினங்களை ஆண்டவர் விட்டு வைத்திருந்தார்.இம்மக்கள் அனைவரும் கானானின் போர் முறையை அறிந்திருக்கவில்லை. |
2 | இஸ்ரயேல் மக்களின் இத்தலைமுறையினர் போர்முறையைக் கற்றுக் கொள்ளுமாறும் இதனை இதுவரை அறியாதோர்க்குக் கற்றுத்தருமாறும் விட்டுவைக்கப்பட்டோர்: |
3 | ஐந்து பெலிஸ்திய இளவரசர், அனைத்துக் கானானியர், சீதோனியர், பாகால் எர்மோன் மலைநாட்டிலிருந்து ஆமாத்துக் கணவாய்வரை லெபனோன் மலையில் வாழ்ந்த இவ்வியர். |
4 | மோசே வழியாக இஸ்ரயேலரின் மூதாதையருக்கு ஆண்டவர் இட்ட கட்டளைகளுக்கு அவர்கள் கீழ்ப்படிவார்களா என்று சோதித்து அறியும் பொருட்டு அவர்கள் விடப்பட்டிருந்தனர். |
5 | இஸ்ரயேல் மக்கள் கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் நடுவில் வாழ்ந்தனர். |
6 | இவர்கள், அவர்கள் புதல்வியரைத் தங்கள் மனைவியராகக் கொண்டனர்: தங்கள் புதல்வியரை அவர்கள் புதல்வருக்குக் கொடுத்தனர்: அவர்களுடைய தெய்வங்களுக்கு ஊழியம் செய்தனர். |
7 | ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதை இஸ்ரயேலர் செய்தனர்.தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து, பாகாலுக்கும் அசேராக்களுக்கும் ஊழியம் செய்தனர். |
8 | இஸ்ரயேலருக்கு எதிராக ஆண்டவரின் சினம் மூண்டது.அவர் அவர்களை மெசப்பொத்தாமியா மன்னன் கூசான் ரிசத்தாயிமிடம் ஒப்படைத்து விட்டார்.இஸ்ரயேலர் கூசான் ரிசத்தாயிமுக்கு எட்டாண்டுகள் அடிமைப்பட்டிருந்தனர். |
9 | இஸ்ரயேலர் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர்.ஆண்டவர் அவர்களுக்கு விடுதலை அளிக்க ஒருவரை எழச் செய்தார்.அவர் காலேபின் இளைய சகோதரரான கெனாசின் மகன் ஒத்னியேல்.அவர் அவர்களுக்கு விடுதலை அளித்தார். |
10 | அவர்மீது ஆண்டவரின் ஆவி இருந்தது.அவர் இஸ்ரயேலருக்கு நீதித்தீர்ப்பு வழங்கினார்.அவர் போருக்குச் சென்றார்.அவரிடம் மெசப்பொத்தாமியா மன்னன் கூசான் ரிசத்தாயிமை ஆண்டவர் ஒப்படைத்தார்.அவர் கூசான் ரிசத்தாயிமின் மீது வெற்றி கொண்டார். |
11 | நாடு நாற்பது ஆண்டுகள் அமைதியாக இருந்தது.பின் கெனாசின் மகன் ஒத்னியேல் இறந்தார். |
12 | இஸ்ரயேல் மக்கள் மீண்டும் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தனர்.மோவாபின் மன்னன் எக்லோனை இஸ்ரயேலருக்கு எதிராக ஆண்டவர் வலிமைப்படுத்தினார்.ஏனெனில் அவர்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தனர். |
13 | அவன் தன்னுடன் அம்மோனியரையும் அமலேக்கியரையும் சேர்த்துக்கொண்டு சென்று, இஸ்ரயேலரை வென்று, பேரீச்ச நகரைக் கைப்பற்றினான். |
14 | இஸ்ரயேல் மக்கள் மோவாபின் மன்னன் எக்லோனுக்குப் பதினெட்டு ஆண்டுகள் அடிமைப்பட்டிருந்தனர். |
15 | இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர்.ஆண்டவர் அவர்களுக்கு விடுதலை அளிக்க பென்யமினைச் சார்ந்த கேராவின் மகன் ஏகூதை எழச் செய்தார்.அவர்இடக்கை மனிதர்.இஸ்ரயேல் மக்கள் மோவாபின் மன்னன் எக்லோனுக்குக் கப்பம் கட்டுமாறு அவரை அனுப்பிவைத்தனர். |
16 | ஏகூது தமக்கு ஒரு முழ நீளமும், இருபக்கம் கருக்குமுள்ள வாள் ஒன்றைச் செய்து கொண்டார்.அதை அவர் தம் ஆடைகளுக்கு அடியில் வலதுதொடையில் கட்டி வைத்துக்கொண்டார். |
17 | அவர் மோவாபு மன்னன் எக்லோனுக்குக் கப்பத்தைச் செலுத்தினார்.எக்லோன் மிகவும் பருத்த மனிதன். |
18 | ஏகூது கப்பத்தைச் செலுத்தி முடித்ததும், கப்பப் பொருள்களைச் சுமந்து வந்த மக்களை அவர் அனுப்பிவிட்டார். |
19 | அவர் கில்காலுக்கு அருகில் உள்ள சிலைகள் வரை சென்று திரும்பி வந்து,”மன்னரே! என்னிடம் உமக்கு ஓர் இரகசிய செய்தி உள்ளது” என்றார்.அவன்”அமைதி” என்றான்.அவனைச் சுற்றி நின்ற அனைவரும் அவனை விட்டுவிட்டு வெளியேறினர். |
20 | ஏகூது அவன் அருகில் வந்தார்.அப்பொழுது அவன் குளிர்ந்த மேலறையில் தனியாக அமர்ந்திருந்தான்.ஏகூது,”உமக்கான கடவுளின் செய்தி ஒன்று என்னிடம் உள்ளது” என்று கூற, அவன் தன் இருக்கையிலிருந்து எழுந்தான். |
21 | ஏகூது தம் இடக்கையை நீட்டி வலது தொடையிலிருந்து வாளை உருவி அவனுடைய வயிற்றில் குத்தினார். |
22 | வாளோடு கைப்பிடியும் உள்ளே இறங்கியது.கொழப்பு கைப்பிடியை மூடியதால், வாளை வயிற்றிலிருந்து வெளியே அவரால் உருவ முடியவில்லை.அது பின்புறமாக வெளியே வந்தது. |
23 | ஏகூது முன்தளத்திற்கு வந்து மேலறையின் கதவுகளை அடைத்துப் பூட்டினார். |
24 | அவர் வெளியே சென்றபின், மன்னனின் வேலையாளர்கள் வந்தனர்.இதோ! அவனது மேலறையில் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனர்.அவன் குளிர்ந்த மேலறையின் கழிவறைக்குத்தான் சென்றிருப்பான் என்று கூறிக் கொண்டனர். |
25 | அவர்கள் காத்திருந்து ஏமாற்றமடைந்தனர்.மேலறையின் கதவுகளை அவன் திறக்காமல் போகவே, அவர்கள் சாவியை எடுத்துத் திறந்தார்கள்.இதோ! அவர்கள் தலைவன் தரையில் இறந்து கிடந்தான். |
26 | அவர்கள் காத்திருந்த நேரத்தில் ஏகூது கற்சிலைகளைக் கடந்து, செயிராவுக்குத் தப்பி ஓடினார். |
27 | அவர் அங்கு வந்து எப்ராயிம் மலையில் எக்காளம் ஊதினார்.அவர் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் மலைநாட்டிலிருந்து கீழே இறங்கினர். |
28 | அவர் அவர்களிடம்,”என் பின்னால் வாருங்கள்.ஆண்டவர் மோவாபியராகிய உங்கள் எதிரிகளை உங்களிடம் ஒப்படைத்துள்ளார்” என்றார்.அவர்கள் அவர் பின்னே சென்று மோவாபுக்கு எதிரே இருந்த யோர்தானின் கடவுதுறைகளைக் கைப்பற்றினர்.எவரும் கடந்து செல்ல அனுமதிக்கவில்லை. |
29 | அவர்கள் அவ்வமயம் மோவாபியருள் உடற்கட்டும் வலிமையும் வாய்ந்த பத்தாயிரம் பேரைக் கொன்றனர்.எவரும் தப்பிவில்லை. |
30 | அந்நாளில் மோவாபு இஸ்ரயேலின் ஆற்றலால் அடக்கப்பட்டது.எண்பது ஆண்டுகள் நாடு அமைதியாக இருந்தது. |
31 | ஏகூதுக்குப் பின், அனாத்தின் மகன் சம்கார் தலைவராக இருந்தார்.அவர் அறுநூறு பெலிஸ்தியரைக் கலப்பைக் கொழுவால் கொன்றார்.அவரும் இஸ்ரயேலுக்கு விடுதலை அளித்தார். |