வேதாகமத்தை வாசி

யோசுவா 1

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆண்டவரின் ஊழியர் மோசே இறந்தபின், நூனின் மகனும் மோசேயின் உதவியாளருமாகிய யோசுவாவிடம் ஆண்டவர் பின்வருமாறு கூறினார்:
2“என் ஊழியன் மோசே இறந்துவிட்டான்.இப்பொழுது நீ புறப்பட்டு, யோர்தானைக் கடந்து, இந்த மக்கள் அனைவரோடும் நான் இஸ்ரயேலருக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் செல்.
3மோசேக்கு நான் கூறியவாறு உன் காலடிபடும் இடத்தை எல்லாம் உங்களுக்குக் கொடுப்பேன்.
4பாலைநிலத்திலிருந்து இந்த லெபனோன் வரையிலும், யூப்பிரத்தீசு பேராறு தொடங்கி இத்தியர் நாடு முழுவதுமாகக் கதிரவன் மறையும் பெருங்கடல் வரையிலும் உங்கள் நிலமாக இருக்கும்.
5உன் வாழ்நாள் முழுவதும் எந்த மனிதனும் உன்னை எதிர்த்து நிற்கமாட்டான்.மோசேயுடன் நான் இருந்ததுபோல் உன்னோடும் இருப்பேன்.உன்னைக் கைநெகிழ மாட்டேன்: கைவிடவும் மாட்டேன்.
6வீறுகொள், துணிந்துநில்.ஏனெனில் இம்மக்களின் மூதாதையருக்குக் கொடுப்பதாக நான் வாக்களித்த நாட்டை இவர்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு செய்வாய்.
7திடமும் உறுதியும் கொண்டு என் ஊழியன் மோசே கட்டளையிட்ட எல்லாச் சட்டங்களையும் கடைப்பிடிப்பதில் கவனமாயிரு.நீ அதனின்று வலப்புறமோ இடப்புறமோ திரும்பாதே.அப்பொழுதுதான் நீசெல்லும் வழியெல்லாம் வெற்றி பெறுவாய்.
8இந்தத் திருச்சட்ட நூலை உன் முன்னின்று அகற்றாதே.இரவும் பகலும் இதனைத் தியானம் செய்து, இதில் எழுதியுள்ள அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கவனமாய் இரு.அப்பொழுது தான் நீ செல்லும் இடம்எல்லாம் நலம் பெறுவாய்: வெற்றி காண்பாய்.
9நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன்.
10யோசுவா மக்களின் மேற்பார்வையாளருக்குக் கட்டளையிட்டுக் கூறியது:
11“பாளையத்தின் நடுவே சென்று இவ்வாறு மக்களுக்குரிய கட்டளையாகக் கூறுங்கள்:”உங்களுக்கு வேண்டிய உணவைத் தயார் செய்யுங்கள்.ஏனெனில், இன்னும் மூன்று நாள்களில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் உடைமையாக உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை உரிமையாக்கிக்கொள்ள இந்த யோர்தானைக் கடப்பீர்கள்.”
12ரூபன், காத்தின் மக்களுக்கும், மனாசேயின் அரைக் குலத்திற்கும் யோசுவா கூறியது:
13உங்களுக்கு ஆண்டவரின் ஊழியர் மோசே கட்டளையிட்டதை நினைவுகொள்ளுங்கள்.உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு அமைதி அருள்வார்.இந்நாட்டை உங்களுக்கு அளிப்பார்.
14உங்கள் மனைவியரும், குழந்தைகளும், கால்நடைகளும், மோசே உங்களுக்குக் கொடுத்த கீழை யோர்தானில் தங்கலாம்.ஆனால் வலிமைமிக்க நீங்கள் படைக்கலம் தாங்கிய போர் வீரர்களாக உங்கள் சகோதரர்களுக்கு முன்பாகக் கடந்து சென்று அவர்களுக்கு முன்பாகக் கடந்து சென்று அவர்களுக்கு உதவுங்கள்.
15ஆண்டவர் உங்களுக்குச் செய்ததுபோல் உங்கள் சகோதரர்களையும் அந்நாட்டில் குடியேற்றி அவர்களுக்கும் அமைதி அருள்வார்.அதுவரை அவர்களுக்கு உதவுங்கள்.அவர்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கும் நாட்டை உரிமையாக்கிக் கொள்வர்.பின்னர், கதிரவன் உதிப்பதும், கடவுளின் ஊழியர் மோசே உங்களுக்கு அளித்ததும், நீங்கள் ஏற்கனவே உடைமையாக்கிக் கொண்டதுமான கீழையோர்தானுக்குத் திரும்பிவந்து அந்நாட்டை உரிமையாக்கிக்கொள்வீர்கள்.”
16அவர்கள் யோசுவாவிடம்,”நீர் எங்களுக்குக் கட்டளை இடுவதை நாங்கள் செய்வோம்.நீர் அனுப்பும் இடத்திற்கெல்லாம் நாங்கள் செல்வோம்.
17நாங்கள் மோசேக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்ததுபோல் உமக்கும் கீழ்ப்படிவோம்.உம் கடவுளாகிய ஆண்டவர் மோசேயுடன் இருந்ததுபோல் உம்மோடும் இருப்பாராக.
18உம் வாய் மொழியை எதிர்ப்பவன் எவனும், நீர் எங்களுக்குக் கட்டளை இடுபவை அனைத்திற்கும் செவிகொடுக்காதவன் எவனும் கொல்லப்பட வேண்டும். வீறுகொண்டு துணிந்து நிற்பீராக” என்றனர்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.