வேதாகமத்தை வாசி

தீத்து 3

                   
புத்தகங்களைக் காட்டு
1நீ அவர்களுக்கு நினைவூட்ட வேண்டியவை: தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அவர்கள் பணிந்து கீழ்ப்படிய வேண்டும்: அனைத்து நற்செயல்களையும் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும்.
2எவரையும் பழித்துரைக்கலாகாது: சண்டையிடலாகாது: கனிந்த உள்ளத்தினராய் மக்கள் அனைவரோடும் நிறைந்த பணிவுடன் பழக வேண்டும்.
3ஏனெனில் நாமும் ஒரு காலத்தில் அறியாமையில் இருந்தோம்: கீழ்ப்படியாமல் இருந்தோம்: நெறிதவறிச் சென்றோம்: தீய நாட்டங்களுக்கும் பல்வகைச் சிற்றின்பங்களுக்கும் அடிமைகளாய் இருந்தோம்: தீமையிலும் பொறாமையிலும் உழன்றோம்: காழ்ப்புணர்ச்சி கொண்டவராய் ஒருவர் மற்றவரை வெறுத்தோம்.
4நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது,
5நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார்.
6அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார்.
7நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும் பொருட்டே இவ்வாறு செய்தார்.
8இக்கூற்று உண்மையானது. கடவுளிடம் நம்பிக்கை கொண்டவர்கள் நற்செயல்களைச் செய்யக் கருத்தாய் இருக்கும்படி நீ வலியுறுத்தவேண்டும் என்பதே என் விருப்பம். இந் நற்செயல்களைச் செய்வதே முறையானது: இவை மக்களுக்குப் பயன்படும்.
9மடத்தனமான விவாதங்கள், மூதாதையர் பட்டியல்கள் பற்றிய ஆய்வுகள், போட்டி மனப்பான்மை, திருச்சட்டத்தைப் பற்றிய சண்டைகள் ஆகியவற்றை விலக்கு. இவை பனயனற்றவை, வீணானவை.
10சபையில் பிளவு ஏற்படக் காரணமாயிருப்போருக்கு ஒருமுறை, தேவையானால் இன்னொரு முறை அறிவு புகட்டிவிட்டுப் பின் விட்டுவிடு.
11இப்படிப்பட்டவர் நெறிதவறியோர் என்பதும் தங்களுக்கே தண்டனைத் தீர்ப்பளித்துக்கொண்ட பாவிகள் என்பதும் உனக்குத் தெரிந்ததே.
12அர்த்தமாவை அல்லது திக்கிக்குவை நான் உன்னிடம் அனுப்பும்போது நீ நிக்கப்பொலி நகருக்கு என்னிடம் விரைந்து வந்து சேர். எனெனில் நான் குளிர்காலத்தை அங்கே செலவிடத் தீர்மானித்துள்ளேன்.
13வழக்கறிஞர் சேனாவையும் அப்பொல்லோவையும் அனுப்பிவைக்க முழு முயற்சி செய். அவர்களுக்கு எந்தக் குறையுமில்லாமல் பார்த்துக்கொள்.
14நம்மைச் சேர்ந்தவர்களும் பயனற்றவர்களாய் இராதபடிக்கு உடனடித் தேவைகளை நிறைவுசெய்யும் முறையில் நற்செயல்களைச் செய்யக் கற்றுக் கொள்வார்களாக!
15என்னோடு இருக்கும் அனைவரும் உனக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். விசுவாச அடிப்படையில் அன்பர்களாயிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக் கூறு. இறையருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.