வேதாகமத்தை வாசி

தீத்து 2

                   
புத்தகங்களைக் காட்டு
1நீயோ நலந்தரும் போதனைக்கேற்பப் பேசு.
2வயது முதிர்ந்த ஆண்கள் அறிவுத்தெளிவு, கண்ணியம், கட்டுப்பாடு உடையவர்களாய் இருந்து நம்பிக்கை, அன்பு, மனஉறுதி ஆகியவற்றை நன்கு காத்துக்கொள்ளச் சொல்.
3அவ்வாறே வயது முதிர்ந்த பெண்களும் தூய நடத்தை உடையவர்களாய், புறங்கூறாதவர்களாய், குடிவெறிக்கு அடிமை ஆகாதவர்களாய், நற்போதனை அளிப்பவர்களாய் இருக்குமாறு கூறு.
4இவ்வாறு கற்றுக் கொடுப்பதால் இளம்பெண்கள் தங்கள் கணவரிடமும் பிள்ளைகளிடமும் அன்பு காட்டி,
5கட்டுப்பாடும் கற்பும் உள்ளவர்களாய் வீட்டுவேலைகளைச் செவ்வனே செய்பவர்களாய்த் தங்கள் கணவருக்குப் பணிந்திருப்பார்கள். அப்பொழுதுதான் கடவுளுடைய வார்த்தை பழிப்புக்குள்ளாகாது.
6அவ்வாறே இளைஞரும் கட்டுப்பாடு உள்ளவராய் இருக்க அறிவுரை கூறு.
7நற்செயல்களைச் செய்வதில் எல்லாவகையிலும் நீயே முன்மாதிரியாய் இரு: நாணயத்தோடும் கண்ணியத்தோடும் கற்றுக்கொடு.
8யாரும் குற்றம் கண்டுபிடிக்க முடியாத நலந்தரும் வார்த்தைகளைப் பேசு. அப்பொழுது எதிரிகள் நம்மைப்பற்றித் தீயன பேச எதுவுமின்றி வெட்கிப் போவார்கள்.
9அடிமைகள் தங்கள் தலைவர்களுக்கு அனைத்திலும் பணிந்து நடந்து, அவர்களுக்கு உகந்தவர்களாய் இருக்கவேண்டும்: எதிர்த்துப் பேசலாகாது எனக் கூறு.
10அவர்கள் கையாடல் செய்யாது, முழு நம்பிக்கைக்குரிய நல்லவர்கள் என்று நடத்தையில் காட்ட வேண்டும். அப்பொழுது நம் மீட்பராம் கடவுளின் போதனை எல்லா வகையிலும் சிறப்புப் பெறும்.
11ஏனெனில் மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது.
12நாம் இறைப்பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம்.
13மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது.
14அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.
15நீ இவைபற்றிப் பேசு: முழு அதிகாரத்தோடும் அறிவுறுத்திக் கடிந்து கொள். யாரும் உன்னைத் தாழ்வாக மதிப்பிட இடமளிக்காதே.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.