வேதாகமத்தை வாசி

2தீமோத்தேயு 3

                   
புத்தகங்களைக் காட்டு
1இறுதி நாள்களில் கொடிய காலங்கள் வரவிருக்கின்றன என அறிந்து கொள்.
2தன்னலம் நாடுவோர், பண ஆசையுடையோர், வீம்புடையோர், செருக்குடையோர், பழித்துரைப்போர், பெற்றோருக்குக் கீழ்ப்படியாதோர், நன்றியற்றோர், தூய்மையற்றோர்,
3அன்புணர்வு அற்றோர், ஒத்துப் போகாதோர், புறங்கூறுவோர், தன்னடக்கமற்றோர், வன்முறையாளர், நன்மையை விரும்பாதோர்,
4துரோகம் செய்வோர், கண்மூடித்தனமாகச் செயல்படுவோர், தற்பெருமை கொள்வோர், கடவுளை விரும்புவதை விட சிற்றின்பத்தை அதிகம் விரும்புவோர் ஆகியோர் தோன்றுவர்.
5இவர்கள் இறைப்பற்று உடையவர்கள் போன்று காணப்படுவார்கள். ஆனால், இறைப்பற்றின் வல்லமையோ அவர்களிடம் இராது. இத்தகையவர்களோடு சேராதே!
6இத்தகையோரில் சிலர் வீடுகளில் நுழைந்து பேதைப் பெண்களைத் தம்வயப்படுத்திக் கொள்கின்றனர். இப்பெண்கள் பல்வேறு தீய நாட்டங்களால் கவரப்பட்டுப் பாவங்களில் மூழ்கியுள்ளனர்.
7இவர்கள் ஓயாமல் கற்றுக்கொண்டே இருந்தாலும் ஒருபோதும் உண்மையை அறிந்து கொள்ள மாட்டார்கள்.
8இயன்னே, இயம்பிரே என்போர் மோசேயை எதிர்த்து நின்றது போல இம் மனிதர்களும் உண்மையை எதிர்த்து நிற்கிறார்கள். இவர்கள் சீரழிந்த மனம் கொண்டவர்கள்: விசுவாசத்தில் தேர்ச்சியற்றவர்கள்.
9ஆனால் இனி இவர்கள் அதிகம் முன்னேற மாட்டார்கள். ஏனெனில் அவ்விருவருக்கும் நேரிட்டது போன்று இவர்களின் அறியாமை வெளியாகிவிடும்.
10என் போதனை, நடத்தை, நோக்கம், நம்பிக்கை, பொறுமை, அன்பு, மனஉறுதி ஆகியவற்றைப் பின்பற்றிவந்திருக்கிறாய்.
11அந்தியோக்கியாவிலும், இக்கோனியாவிலும், லிஸ்திராவிலும் எனக்கு நேரிட்ட இன்னல்களும் துன்பங்களும் உனக்குத் தெரியும். இத்தகைய இன்னல்களைப் பொறுத்துக் கொண்டேன். இவை அனைத்திலிருந்தும் ஆண்டவர் என்னை விடுவித்தார்.
12கிறிஸ்து இயேசுவிடம் இணைந்து இறைப்பற்றுடன் வாழ விரும்புவோர் அனைவரும் இன்னலுறுவர்.
13ஆனால் தீயோர்களும் எத்தர்களும் மேலும் மேலும் கேடுறுவார்கள். ஏமாற்றும் இவர்கள் ஏமாந்து போவார்கள்.
14நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்: யாரிடம் கற்றாய் என்பது உனக்குத் தெரியுமே.
15நீ குழந்தைப் பருவம் முதல் திருமறைநூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது.
16மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது.
17இவ்வாறு கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.