1 | என் மகனே, நீ கிறிஸ்து இயேசுவின் அருளால் வலிமை பெறு. |
2 | சான்றாளர் பலர் முன்னிலையில் நீ என்னிடம் கேட்டவற்றை, மற்றவர்களுக்குக் கற்பிக்கும் திறமையுள்ளவர்களும் நம்பிக்கைக்கு உரியவர்களுமாகிய மனிதரிடம் ஒப்படை. |
3 | கிறிஸ்து இயேசுவின் நல்ல படை வீரனைப் போன்று துன்பங்களில் பங்கு கொள். |
4 | படைவீரர் எவரும் பிழைப்புக்காகப் பிற அலுவல்களில் ஈடுபட மாட்டார். தம்மைப் படையில் சேர்த்துக்கொண்டவருக்கு அவர் உகந்தவராயிருக்க வேண்டும் அன்றோ! |
5 | விளையாட்டு வீரர் எவரும் விதி முறைகளுக்குட்பட்டு விளையாடினால் மட்டுமே வெற்றிவாகை சூட முடியும். |
6 | நிலத்தில் பாடுபட்டு உழைக்கும் தொழிலாளரே விளைச்சலில் முதற்பங்கு பெற வேண்டும். |
7 | நான் கூறுபவற்றைக் கருத்தில் கொள். ஆண்டவர் உனக்கு அனைத்தையும் புரிந்து கொள்ளும் திறமையைத் தருவாராக. |
8 | தாவீதின் மரபில் வந்த இயேசு கிறிஸ்து இறந்து உயிர்பெற்று எழுந்தார் என்பதே என் நற்செய்தி. இதனை நினைவில் கொள். |
9 | இந்நற்செய்திக்காகவே நான் குற்றம் செய்தவனைப் போலச் சிறையிடப்பட்டுத் துன்புறுகிறேன். ஆனால் கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது. |
10 | தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் மீட்பையும் அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும் கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறேன். |
11 | பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது: “நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்: |
12 | அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சிசெய்வோம்: நாம் அவரை மறுதலித்தால் அவர் நம்மை மறுதலிப்பார். |
13 | நாம் நம்பத்தகாதவரெனினும் அவர் நம்பத்தகுந்தவர். ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது.” இவற்றை நீ அவர்களுக்கு நினைவுறுத்து. |
14 | வெறும் சொற்களைப் பற்றிச் சண்டையிடுவது பயனற்றது: அது கேட்போரின் அழிவுக்கு ஏதுவாகும் எனக் கடவுள் முன்னிலையில் சான்று பகர்ந்திடு. |
15 | நீ கடவுள்முன் ஏற்புடையோனாக நிற்க முழு முயற்சி செய்: உண்மையின் வார்த்தையை நேர்மையாய்ப் பகுத்துக் கூறும் பணியாளாகிய நீ வெட்கமுற வேண்டியதில்லை. |
16 | உலகப் போக்கிலான வீண் பேச்சுகளை விலக்கு: ஏனெனில் அதனால் அவர்கள் மேன்மேலும் இறைப்பற்று அற்றவர்களாவார்கள். |
17 | அவர்களது போதனை சதையழுகல் நோய் போன்று அரித்துத் தின்றுவிடும். இமனேயும் பிலேத்தும் இத்தகையோராவர். |
18 | உயிர்த்தெழுதல் ஏற்கெனவே நிகழ்ந்து விட்டதென்று அவர்கள் சொல்லி, உண்மையை விட்டு விலகிப் போய் விட்டார்கள்: சிலருடைய நம்பிக்கையைச் சீர்குலைத்துவிட்டார்கள். |
19 | கடவுள் இட்ட அடித்தளம் உறுதியாய் நிலைத்து நிற்கிறது. அதில் “ஆண்டவர் தம்முடையோரை அறிவார்” என்றும், “ஆண்டவரின் பெயரை அறிக்கையிடுவோர் அநீதியை விட்டு விட வேண்டும்” என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. |
20 | ஒரு பெரிய வீட்டில் பொன், வெள்ளிக் கலன்கள் மட்டுமல்ல, மண் மற்றும் மரத்தாலான கலன்களும் உள்ளன. அவற்றுள் சில மதிப்புடையவை: சில மதிப்பற்றவை. |
21 | ஒருவர் மதிப்பற்றவற்றிலிருந்து தம்மைத் தூய்மையாக வைத்துக் கொண்டால், அவர் மதிப்புக்குரிய தூய கலனாகக் கருதப்படுவார். அவர் எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாயிருப்பார்: தம் தலைவருக்கும் பயனுள்ளவராயிருப்பார். |
22 | எனவே நீ இள வயதின் இச்சைகளை விட்டு ஓடிவிடு. தூய்மையான உள்ளத்தோடு ஆண்டவரது பெயரை அறிக்கையிட்டு வழிபடுவோருடன் நீதி, நம்பிக்கை, அன்பு, அமைதி ஆகியவற்றை நாடித் தேடு. |
23 | மடத்தனமான அறிவற்ற விவாதங்கள் சண்டைகளைத் தோற்றுவிக்கும் என அறிந்து, அவற்றை விட்டுவிடு. |
24 | ஆண்டவரின் பணியாளர் சண்டையிடாதவராயிருக்க வேண்டும்: அது மட்டுமல்ல, அனைவரிடமும் கனிவு காட்டுகிறவராகவும், கற்பிக்கும் திறமையுடையவராகவும், தீமையைப் பொறுத்துக் கொள்பவராகவும், |
25 | மாற்றுக் கருத்துடையோருக்கும் பணிவோடு பயிற்றுவிப்பவராகவும் இருக்க வேண்டும். ஏனெனில் ஒருவேளை அவர்கள் உண்மையை அறிந்துணர்ந்து மனம் மாறக் கடவுள் அருள்கூரலாம். |
26 | அலகையின் விருப்பத்திற்கேற்ப அதன் பிடியில் வாழும் அவர்கள் அதன் கண்ணிக்குத் தப்பி மனத்தெளிவு பெறக் கூடும். |