1 | இறுதி நாள்களில் கொடிய காலங்கள் வரவிருக்கின்றன என அறிந்து கொள். |
2 | தன்னலம் நாடுவோர், பண ஆசையுடையோர், வீம்புடையோர், செருக்குடையோர், பழித்துரைப்போர், பெற்றோருக்குக் கீழ்ப்படியாதோர், நன்றியற்றோர், தூய்மையற்றோர், |
3 | அன்புணர்வு அற்றோர், ஒத்துப் போகாதோர், புறங்கூறுவோர், தன்னடக்கமற்றோர், வன்முறையாளர், நன்மையை விரும்பாதோர், |
4 | துரோகம் செய்வோர், கண்மூடித்தனமாகச் செயல்படுவோர், தற்பெருமை கொள்வோர், கடவுளை விரும்புவதை விட சிற்றின்பத்தை அதிகம் விரும்புவோர் ஆகியோர் தோன்றுவர். |
5 | இவர்கள் இறைப்பற்று உடையவர்கள் போன்று காணப்படுவார்கள். ஆனால், இறைப்பற்றின் வல்லமையோ அவர்களிடம் இராது. இத்தகையவர்களோடு சேராதே! |
6 | இத்தகையோரில் சிலர் வீடுகளில் நுழைந்து பேதைப் பெண்களைத் தம்வயப்படுத்திக் கொள்கின்றனர். இப்பெண்கள் பல்வேறு தீய நாட்டங்களால் கவரப்பட்டுப் பாவங்களில் மூழ்கியுள்ளனர். |
7 | இவர்கள் ஓயாமல் கற்றுக்கொண்டே இருந்தாலும் ஒருபோதும் உண்மையை அறிந்து கொள்ள மாட்டார்கள். |
8 | இயன்னே, இயம்பிரே என்போர் மோசேயை எதிர்த்து நின்றது போல இம் மனிதர்களும் உண்மையை எதிர்த்து நிற்கிறார்கள். இவர்கள் சீரழிந்த மனம் கொண்டவர்கள்: விசுவாசத்தில் தேர்ச்சியற்றவர்கள். |
9 | ஆனால் இனி இவர்கள் அதிகம் முன்னேற மாட்டார்கள். ஏனெனில் அவ்விருவருக்கும் நேரிட்டது போன்று இவர்களின் அறியாமை வெளியாகிவிடும். |
10 | என் போதனை, நடத்தை, நோக்கம், நம்பிக்கை, பொறுமை, அன்பு, மனஉறுதி ஆகியவற்றைப் பின்பற்றிவந்திருக்கிறாய். |
11 | அந்தியோக்கியாவிலும், இக்கோனியாவிலும், லிஸ்திராவிலும் எனக்கு நேரிட்ட இன்னல்களும் துன்பங்களும் உனக்குத் தெரியும். இத்தகைய இன்னல்களைப் பொறுத்துக் கொண்டேன். இவை அனைத்திலிருந்தும் ஆண்டவர் என்னை விடுவித்தார். |
12 | கிறிஸ்து இயேசுவிடம் இணைந்து இறைப்பற்றுடன் வாழ விரும்புவோர் அனைவரும் இன்னலுறுவர். |
13 | ஆனால் தீயோர்களும் எத்தர்களும் மேலும் மேலும் கேடுறுவார்கள். ஏமாற்றும் இவர்கள் ஏமாந்து போவார்கள். |
14 | நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்: யாரிடம் கற்றாய் என்பது உனக்குத் தெரியுமே. |
15 | நீ குழந்தைப் பருவம் முதல் திருமறைநூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது. |
16 | மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது. |
17 | இவ்வாறு கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார். |