வேதாகமத்தை வாசி

2கொரிந்தியர் 9

                   
புத்தகங்களைக் காட்டு
1இறைமக்களுக்குச் செய்யும் அறப்பணியைக் குறித்து உங்களுக்கு நான் தொடர்ந்து எழுதத் தேவையில்லை.
2உங்களுக்கு உள்ள ஆர்வம் எனக்குத் தெரிந்ததே. அதைக் குறித்து மாசிதோனிய மக்களிடம் பெருமையோடு பேசியிருக்கிறேன். அக்காயா மாநில மக்கள் கடந்த ஆண்டிலிருந்தே அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள் எனவும் சொல்லியிருக்கிறேன். இந்த உங்கள் ஆர்வம் பலரைத் தூண்டிவிட்டிருக்கிறது.
3எனவே இந்த அறப்பணியைப் பொறுத்த வரையில் உங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசியது பொருளற்ற பேச்சல்ல என்பதைத் தெளிவுபடுத்தவும் நான் சொன்னதற்கேற்ப நீங்கள் பொருளுதவி செய்யத் தக்க ஏற்பாட்டுடன் இருக்கவுமே இந்த மூன்று சகோதரர்களையும் அனுப்புகிறேன்.
4என்னோடு வரும் மாசிதோனியர் நீங்கள் பொருளுதவிக்கான ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்று கண்டால் நாங்கள் வெட்கமுற வேண்டியிருக்கும்: நீங்களும் வெட்கமுற வேண்டியிருக்கும் எனச் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் மீது நான் அத்துணைத் திடநம்பிக்கை கொண்டிருக்கிறேன் அல்லவா!
5இந்தச் சகோதரர்கள் எனக்கு முன்னால் உங்களிடம் வந்து நீங்கள் வாக்களித்த நன்கொடையைத் திரட்டி வைக்க முன்னேற்பாடு செய்தால் நான் அங்கு வரும்போது அது தயார் நிலையில் இருக்கும். அது கட்டாயப்படுத்தித் திரட்டப்பட்டதாக அன்றி, நீங்களாகக் கொடுத்த நன்கொடையாகவும் இருக்கும்.
6குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார். இதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
7ஒவ்வொருவரும் தம்முள் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்கவேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்.
8கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர். எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்குத் தருவார்: அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவையானதெல்லாம் உங்களுக்கு மிகுதியாகவே தருவார்.
9‘ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கும்போது அவரது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும் ‘ என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா!
10விதைப்பவருக்கு விதையையும், உண்பதற்கு உணவையும் வழங்குபவர், விதைப்பதற்கு வேண்டிய விதைகளை வழங்கி அவை முளைத்து வளரச் செய்து அறச் செயல்களாகிய விளைச்சலை மிகுதியாகத் தருவார்.
11நீங்கள் எல்லா வகையிலும் செல்வர்களாகி வள்ளன்மை மிகுந்தவர்களாய் விளங்குவீர்கள். இவ்வாறு எங்கள் பணிவழியாய்ப் பலர் கடவுளுக்கு நன்றி செலுத்துவர்.
12நீங்கள் திருத்தொண்டாக ஏற்றுக்கொண்ட இப்பணி இறைமக்களின் தேவையை நிறைவு செய்வது மட்டுமன்றிப் பலர் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியின் நிறைவாக அமையும்.
13இவ்வாறு நீங்கள் ஏற்று அறிக்கையிடும் கிறிஸ்துவின் நற்செய்திக்கு நீங்கள் காட்டும் கீழ்ப்படிதல் புலப்படும்: அவர்களுக்கும் மற்றெல்லாருக்கும் நீங்கள் செய்த உங்கள் பொருளுதவியால் உங்கள் வள்ளன்மை வெளிப்படும். இவ்வாறு அவர்கள் இந்த அறப்பணியின் விளைவாகக் கடவுளைப் போற்றிப் புகழ்வார்கள்.
14கடவுள் உங்கள் மீது அளவற்ற அருள் பொழிந்துள்ளதால் அவர்கள் உங்களோடு நெருங்கிய ஈடுபாடு கொண்டு உங்களுக்காக இறைவனிடம் வேண்டுவர்.
15கடவுளின் சொல்லொண்ணாக் கொடைக்காக அவருக்கே நன்றி உரித்தாகுக!

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.