1 | இப்போது சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றைக் குறித்துப் பார்ப்போம். நம் அனைவருக்கும் அறிவு உண்டு. இது நமக்குத் தெரிந்ததே. இவ்வறிவு இறுமாப்படையச் செய்யும்: ஆனால் அன்பு உறவை வளர்க்கும். |
2 | தமக்கு ஏதோ அறிவு இருக்கிறது என்று நினைக்கிறவர் அறிய வேண்டிய முறையில் எதையும் அறிந்து கொள்ளவில்லை. |
3 | கடவுளிடம் அன்பு செலுத்துகிறவரைக் கடவுள் அறிவார். |
4 | இப்போது சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை உண்பதைக் குறித்துப் பார்ப்போம்: “இவ்வுலகில் சிலை என்பது ஒன்றுமேயில்லை “, “கடவுள் ஒருவரன்றி வேறு தெய்வங்கள் இல்லை “ என்று நமக்குத் தெரியும். |
5 | விண்ணிலும் மண்ணிலும் தெய்வங்கள் என்று சொல்லப்படுபவை பல இருக்கலாம்: தெய்வங்கள் பலவும் ஆண்டவர்கள் பலரும் உளர். |
6 | ஆனால் நமக்குக் கடவுள் ஒருவரே: அவரே நம் தந்தை. அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன: அவருக்காக நாம் இருக்கின்றோம். அவ்வாறே, நமக்கு ஆண்டவரும் ஒருவரே: அவரே இயேசு கிறிஸ்து. அவர் வழியாகவே அனைத்தும் வருகின்றன: அவர் மூலமாகவே நாம் வாழ்கிறோம். |
7 | ஆனால் இவ்வறிவு எல்லாரிடமும் இல்லை. இதுவரை சிலைகளை வழிபட்டுப் பழக்கப்பட்ட சிலர் அவற்றிற்குப் படைக்கப்பட்டவற்றைப் படையல் பொருள் என எண்ணி உண்கிறார்கள். அவர்களின் மனச் சான்று வலுவற்றதாயிருப்பதால் அது கறைப்படுகிறது. |
8 | நாம் உண்ணும் உணவு நம்மைக் கடவுளிடம் கொண்டு சேர்க்காது. உண்ணாதிருப்பின் அதனால் ஒரு குறையுமில்லை. உண்போமாயின் அதனால் ஒரு நிறைவுமில்லை. |
9 | ஆனால் உங்களுக்கிருக்கும் உரிமை மனவலிமையற்றவர்களுக்குத் தடைக்கல்லாயிராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். |
10 | “அறிவு “ கொண்டுள்ள நீங்கள் சிலைவழிபாட்டுக் கோவிலில் பந்தியமர்ந்திருப்பதை வலுவற்ற மனச்சான்று உடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் காண்பாரானால் அவரும் சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை உண்ணத் தூண்டப் பெறுவாரல்லவா? |
11 | இவ்வாறு இந்த “அறிவு “ வலுவற்றவரின் அழிவுக்குக் காரணமாகிறது. அவர் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் அல்லவா? அவருக்காகவும் கிறிஸ்து இறந்தார் அல்லவா? |
12 | இவ்வாறு நீங்கள் வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்திச் சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்தால், அது கிறிஸ்துவுக்கே எதிரான பாவம் ஆகும். |
13 | ஆகையால் என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நான் உண்ணும் உணவு ஒரு தடைக்கல்லாக இருக்குமானால், இறைச்சியை ஒரு நாளும் உண்ணமாட்டேன். அவர் பாவத்தில் விழ நான் காரணமாய் இருக்கமாட்டேன். |