1 | அப்படியானால், மற்றவர்களை விட யூதர்கள் பெற்றுள்ள சிறப்பு என்ன? விருத்தசேதனத்தால் அவர்களுக்குப் பயன் என்ன? |
2 | எல்லா வகையிலும் அவர்கள் பெரும்பயன் பெற்றுள்ளார்கள். முதலாவது, கடவுளின் வாக்குகள் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. |
3 | ஆனால், அவர்களுள் சிலர் அவ்வாக்குகளை நம்பவில்லையே! அதனாலென்ன? அவர்கள் நம்பாதலால், கடவுள் நம்பத்தகாதவர் ஆகிவிடுவாரா? |
4 | ஒருபோதுமில்லை. மனிதர் எல்லாரும் பொய்யர்: கடவுளோ உண்மை உள்ளவர் என்பது தெளிவாகும். ஏனெனில்.”உமது சொற்களில் நீதி வெளிப்படுகிறது: உம் தண்டனைத் தீர்ப்புகளில் வெற்றி விளங்குகிறது” என மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ! |
5 | நீதியற்ற நம் நடத்தையின் மூலம் கடவுளின் நீதி வெளிப்படுமாயின் நாம் என்ன சொல்வோம்? கடவுள் சினந்தெழுந்து தண்டித்தால், அவர் நீதியற்றவர் என்போமா?-இதை நான் மனிதர் பேசும் முறையில் சொல்லுகிறேன்- |
6 | ஒருபோதும் இல்லை. கடவுள் நீதியற்றவர் என்றால் எப்படி அவர் உலகிற்குத் தீர்ப்பளிக்க முடியும்? |
7 | என் பொய்ம்மையின் மூலம் கடவுளின் வாய்மை வெளிப்படுவதோடு அவரது மாட்சியும் பெருகுமானால், இன்னும் நான் பாவி எனத் தீர்ப்பளிக்கப்படுவது ஏன்? |
8 | அப்படியானால், “நன்மை விளையும்படி தீமையைச் செய்வோம்” என்று சொல்லலாமா! நாங்கள் இவ்வாறு கூறுவதாகச் சிலர் எங்கள் மீது வீண்பழி சுமத்துகின்றனர். இவர்கள் தகுந்த தண்டனை பெறுவார்கள். |
9 | அப்படியானால், மற்றவர்களைவிட யூதர்களாகிய நாம் மேலானவர்களா? இல்லவே இல்லை. ஏனெனில் யூதர், கிரேக்கர் யாவரும் பாவத்துக்கு உட்பட்டிருப்பதாக ஏற்கெனவே எடுத்துரைத்தாயிற்று. |
10 | அவ்வாறே மறைநூலிலும் எழுதியுள்ளது: “நேர்மையாளரே இல்லை, ஒருவர் கூட இல்லை: |
11 | மதிநுட்பம் உள்ளவர் ஒருவருமில்லை: கடவுளைத் தேடுபவர் எவராவது உண்டோ? |
12 | எல்லாரும் நெறிபிறழ்ந்தனர்: ஒருமிக்கக் கெட்டுப்போயினர். நல்லது செய்பவர் யாருமில்லை: ஒருவர்கூட இல்லை.” |
13 | “அவர்களது தொண்டை திறந்த பிணக்குழி: அவர்களது நாக்கு வஞ்சகமே பேசும். அவர்கள் உதட்டில் உள்ளது விரியன் பாம்பின் நஞ்சு.” |
14 | “அவர்கள் வாயில் சாபமும் கொடுமையும் நிறைந்துள்ளது.” |
15 | “இரத்தம் சிந்துவதற்கு அவர்கள் கால்கள் விரைகின்றன: |
16 | பாழாக்குதலும் அழிவுமே அவர்கள் வழித்தடங்களில் உள்ளன: |
17 | அமைதி வழியை அவர்கள் அறியார்.” |
18 | “அவர்களது மனக்கண்களில் இறையச்சம் இல்லை.” |
19 | திருச்சட்டம் சொல்வதெல்லாம் அந்தச் சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்குப் பொருந்தும் என நமக்குத் தெரியும். ஆகவே இவர்களும் உலக மக்கள் அனைவரும் சாக்குப்போக்குச் சொல்ல வழியின்றி இருக்கிறார்கள். |
20 | ஏனெனில், திருச்சட்டம் சார்ந்த செயல்களால் எவரும் கடவுள் முன்னிலையில் ஏற்புடையவர் ஆவதில்லை. மனிதர்கள் பாவிகள் என்பதையே சட்டம் அவர்களுக்கு உணர்த்துகிறது. |
21 | இப்பொழுதோ கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் செயலுக்கும் திருச்சட்டத்துக்கும் தொடர்பில்லை என்பது வெளியாக்கப்பட்டுள்ளது: திருச்சட்டமும் இறைவாக்குகளும் இதற்குச் சான்று பகர்கின்றன. |
22 | இயேசு கிறிஸ்துவின்மீது கொள்ளும் நம்பிக்கையின் வழியாகக் கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்: நம்பிக்கை கொள்வோர் அனைவரையுமே அவர் ஏற்புடையவராக்குகிறார். அவர் வேறுபாடு காட்டுவது இல்லை. |
23 | ஏனெனில், எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர். |
24 | ஆயினும் அனைவரும் கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய மீட்புச் செயலின் மூலம் கடவுளுடைய அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றனர். |
25 | இரத்தம் சிந்தி மனிதருடைய பாவத்துக்குக் கழுவாய் ஆகுமாறு இயேசுவைக் கடவுள் நியமித்தார். அவரிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவே அவ்வாறு செய்தார். கடவுள் கடந்த காலத்தில் மனிதர் செய்த பாவங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். இவ்வாறு மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் முறையை அவர் காட்டினார். |
26 | இக்காலத்தில் தமது நீதியைக் கடவுள் பொறுமையோடு காட்டி வருகிறார். ஆம், அவர் நீதியுள்ளவர். இயேசுவின்மீது நம்பிக்கை கொள்வோரைத் தமக்கு ஏற்புடையவராக்கி வருகிறார். |
27 | அப்படியிருக்க, பெருமை பாராட்ட இடமேது? இடமில்லை. எந்த அடிப்படையில் பெருமைபாராட்ட இடமில்லை? செயல்களின் அடிப்படையிலா? இல்லை: நம்பிக்கையின் அடிப்படையில்தான். |
28 | ஏனெனில் திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசுவின்மீது வைக்கும் நம்பிக்கையின் வாயிலாகவே எவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும் எனக் கருதுகிறோம். |
29 | கடவுள் யூதருக்கு மட்டுமா கடவுள்? பிற இனத்தாருக்கும் அவர் கடவுள் அல்லவா? ஆம், பிற இனத்தாருக்கும் அவரே கடவுள். |
30 | ஏனெனில் கடவுள் ஒருவரே. விருத்தசேதனம் பெற்றவர்களாயினும் விருத்தசேதனம் பெறாதவர்களாயினும், இயேசுவின்மீது கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையில் யாவரையும் கடவுள் தமக்கு ஏற்புடையவராக்குகிறார். |
31 | அப்படியானால், நம்பிக்கை தேவை என வலியுறுத்துவதன்மூலம் திருச்சட்டத்தைச் செல்லாததாக்குகிறோமா? ஒரு போதும் இல்லை. மாறாக, அவ்வாறு செய்வதன் மூலம் திருச்சட்டத்தை நிலைநாட்டுகிறோம். |